பர்மிங்காம்,
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும் , ஹாரி புரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இன்றைய நாளின் 2-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட ஜோ ரூட் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.
ஸ்டோக்ஸ் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார். சிராஜ் 2 பந்துகளில் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து ஜேமி சுமித் களமிறங்கியுள்ளார். தற்போது வரை இங்கிலாந்து அணி 25 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்துள்ளது. ஹாரி புரூக் 42 ரன்களுடனும், ஜேமி சுமித் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.