பர்மிங்காம்,
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் இந்திய அணி 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜேமி சுமித் (184 ரன்), ஹாரி புரூக் (158 ரன்) சதம் அடித்தனர்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 28 ரன்னுடனும், கருண் நாயர் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் சோயிப் பஷீர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் அடித்துள்ளது. ஆலி போப் 24 ரன்னுடனும், ஹாரி புரூக் 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இத்தகைய சூழலில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக இப்போட்டியில் 4வது நாளில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 10 ரன்னில் இருக்கையில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ரிஷப் 48 பந்துகளில் தனது 16-வது அரைசதத்தை எட்டினார்.
அந்த சமயத்தில் அதிரடியாக விளையாடிய பண்டின் கவனத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஸ்லிப் பகுதியில் நின்றுக்கொண்டு சீண்டினார். அதற்கு ரிஷப் பண்ட் தக்க பதிலடி கொடுத்தார்.
இது குறித்து அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் பின்வருமாறு:-
ஹாரி புரூக்: உங்களுடைய வேகமான சதம் என்ன?
ரிஷப் பண்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டிலா? 80-90 பந்துகள்
புரூக்: நான் 55 பந்துகளில் வேகமான சதம் அடித்துள்ளேன். நீங்களும் இன்று அதைச் செய்யலாம்.
ரிஷப் பண்ட்: பரவாயில்லை. எனக்கு சாதனைகள் மீது அவ்வளவு பேராசை இல்லை. அது நடந்தால் நடக்கட்டும். இவ்வாறு அவர்களுக்கு இடையிலான உரையாடல் அமைந்தது.