புதுடெல்லி: திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாஜக, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய திபெத்துக்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற அமைப்பு இந்த மாதம் நடைபெற்ற அதன் இரண்டாவது கூட்டத்தின்போது இதற்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், பிஜு ஜனதாதளம் மாநிலங்களவை எம்.பியுமான சுஜீத் குமார் தலைமை யிலான 10 பேர் கொண்ட குழு, தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கும் பரிந்துரையை ஆதரிக்கும் கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சுஜீத் குமார் கூறும்போது, ‘‘திபெத்திய மக்களின் நலனுக்கான வலுவான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக, ஜூலை 6-ல் தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடிய தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்காக கையெழுத்து பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்’’ என்றார்.