விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் நீடித்து வரும் பரபரப்பான சூழலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு இன்று (ஜூலை 8) கூடுகிறது. இக்கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் இக்கூட்டத்தை பாமக தலைவர் அன்புமணி புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் பாமக பிளவுபட்டு உள்ளது. இரு கோஷ்டிகளாக நிர்வாகிகள் மற்றும் தொண்டனர் பிரிந்து கிடக்கின்றனர். ‘நீயா..?, நானா..?’ என பார்த்து விடுவோம் என்ற முடிவில் இருவரும் உள்ளனர். ராமதாஸும், அன்புமணியும் தங்களது எதிர் முகாமில் உள்ளவர்களை பரஸ்பரம் நீக்கி வருகின்றனர்.
இதன் உச்சமாக, பாமக கொறடா பொறுப்பில் இருந்து ராமதாஸ் ஆதரவு பெற்றவரான சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை நீக்குமாறு சட்டப்பேரவைத் தலைவரிடம் அன்புமணியின் கடிதத்தை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் கொடுத்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில், பாமக கொறடா பொறுப்பில் எம்எல்ஏ அருள் தொடருவதாக ராமதாஸ் வழங்கிய கடிதம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே புதிய பொறுப்பில் நியமிக்கப்படும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் கடிதத்தின் நகலில் அன்புமணியின் பெயரை கடந்த 2 நாட்களாக ராமதாஸ் தவிர்த்து வருகிறார். மேலும், நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ள செயல் தலைவர் பதவியை பறிக்கவும் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்று ராமதாஸ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி நிர்வாக குழு கூட்டம் முடிவடைந்த நிலையில், திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக செயற்குழுக் கூட்டம் இன்று காலை கூடுகிறது.
இக்கூட்டத்துக்கு நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ் தலைமை வகிக்க உள்ளார். மாவட்ட, மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்படும் என கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்திருந்தார்.
அழைப்பு விடுக்கப்பட்ட தகவலை இரண்டு தரப்பும் உறுதி செய்யவில்லை. இதனால், செயற்குழுக் கூட்டத்தில் அன்புமணியும், அவரது ஆதரவாளர்கள் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாமக செயற்குழுவில், வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாடு தொடர்பாக ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் செயல் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதற்காக நடைபெறும் ஆயத்த கூட்டம் என்றும் தகவல் பரவி வருகிறது. இதற்காக செயற்குழுக் கூட்டத்தில் அச்சாரம் போட்டு, பொதுக்குழுவில் செயல் வடிவம் கொடுக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே அன்புமணி, சென்னையில் கட்சி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். செயற்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், இந்த போட்டிக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.