India vs England Lords Test: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson – Tendulkar Trophy) தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. அந்த வகையில், Home Of Cricket என்றழைக்கப்படும் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 10) தொடங்க இருக்கிறது.
IND vs ENG: இங்கிலாந்து பிளேயிங் லெவன் மாற்றங்கள்
இங்கிலாந்து அணி (Team England) அதன் முதல் போட்டியை Bazball அணுகுமுறையால் வென்று என்றால், 2வது போட்டியை அதே அணுகுமுறையால்தான் தோற்றது என்றும் கூறலாம். சொதப்பலான வேகப்பந்துவீச்சு மற்றும் வியூகத்தில் கோட்டைவிட்டதால் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது. எனவே, 3வது போட்டியில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வியூகத்துடனும், பிளேயிங் லெவனில் மாற்றங்களுடனும் இங்கிலாந்து களமிறங்க வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மூன்று மாற்றங்கள் (Team England Playing XI Changes) இருக்கலாம். பேட்டிங்கை பொருத்தவரை ஜேக்கப் பெத்தலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். ஒல்லி போப்பிற்கு ஓய்வளிக்கப்படும். அதே நேரத்தில், வேகப்பந்துவீச்சில் ஜாப்ரா ஆர்ச்சர் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வோக்ஸ் – ஜாஷ் டங் – பிரைடன் கார்ஸ் ஆகிய மூவரில் எந்த இரண்டு பேர் வெளியேறப்போகிறார்கள் என்பது பென் ஸ்டோக்ஸ் – மெக்கலம் கைகளில்தான் உள்ளன.
IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவன் மாற்றங்கள்
மறுபுறம் இந்திய அணியை (Team India) பொருத்தவரை முதல் போட்டியிலும் சரி, இரண்டாவது போட்டியிலும் சரி இங்கிலாந்து அணி மீது அதிகம் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. ஆனால், இந்திய அணி முதல் போட்டியில் பல முக்கிய வாய்ப்புகளை கோட்டைவிட்டதாலேயே தோல்வியை சந்தித்தது. 2வது போட்டியில் அந்த தவறை திருத்திக்கொண்டதாலேயே வெற்றியும் கிடைத்தது. 2வது போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அணியும் தனது பிளேயிங் லெவனை சீராக்க நினைக்கும் (Team India Playing XI Changes). ஆனால், பெரியளவில் மாற்றங்களை எதிர்பார்க்கவும் முடியாது.
ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) நிச்சயம் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்பதால் பிரசித் கிருஷ்ணாவுக்கு ஓய்வு வழங்கப்படும். ஜஸ்பிரித் பும்ரா – ஆகாஷ் தீப் – முகமது சிராஜ் என வேகப்பந்துவீச்சு பலமாக தோற்றமளிக்கிறது. தொடர்ந்து, 4வது வேகப்பந்துவீச்சாளராக நிதிஷ்குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) தொடர்வார் எனலாம். அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம்.
லார்ட்ஸ் மைதானத்தில் தற்போது அதிக வெப்பம் நிலவும் காரணத்தால், போட்டி 5வது நாளுக்குச் செல்லும்போது ஆடுகளம் வறண்டு காணப்படலாம். அந்த நேரத்தில் 2வது சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படலாம். எனவே வாஷிங்டன் சுந்தரும் (Washington Sundar) குறைந்தபட்சம் பேட்டிங்கிற்காக அணியில் நீடிப்பார் எனலாம். லார்ட்ஸ் மைதானத்தில் 2 ஸ்பின்னர்களை வைத்துக்கொண்டு பெரும்பாலும் எந்த அணியும் விளையாடாது என்பது குறிப்பிடத்தக்கது. இல்லையெனில், ‘லார்ட்’ ஷர்துல் தாக்கூருக்கு (Shardul Thakur) வாய்ப்பு கிடைக்கலாம்.
IND vs ENG: இந்திய அணியின் நம்பர் 3 பிரச்னை
இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, இந்திய அணியின் நம்பர் 3 இடம்தான் பெரிய பிரச்னையாக உள்ளது. புஜாராவுக்கு பின்னர் பல பேரை இந்திய அணி நிர்வாகம் அந்த இடத்தில் களமிறக்கியது. ஆனால் யாருமே அந்த இடத்தை நிரந்தரமாக்கவில்லை. இந்த தொடரில் முதல் போட்டியில் சாய் சுதர்சனும் (Sai Sudharsan), 2வது போட்டியில் கருண் நாயரும் நம்பர் 3இல் இறங்கினர். ஆனால் இருவருமே நல்ல தொடக்கம் கொடுத்தாலும், பெரிய ரன்களை குவிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
IND vs ENG: சாய் சுதர்சன், கருண் நாயர் வேண்டாம்
இதனால், கம்பீர் கருண் நாயருக்கு (Karum Nair) இன்னும் ஒரு வாய்ப்பை வழங்குவாரா அல்லது மாற்றம் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மீண்டும் மாற்றம் செய்யும்பட்சத்தில் அந்த நம்பர் 3 இடத்தில் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஆஸ்திரேலியா தொடரிலும் சரி, இப்போதும் சரி அவரை பெரும்பாலும் யாருமே கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். சாய் சுதர்சனை விட முதல் தர போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் அபிமன்யூ ஈஸ்வரன் (Abhimanyu Easwaran). சிகப்பு பந்தில் அதிக அனுபவம் கொண்டவர்.
IND vs ENG: ஏன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்?
அவர் ஐபிஎல் தொடரில் விளையாடாத காரணத்தால் அவரை குறைத்து மதிப்பிடுவதும் சரியாக இருக்காது. பிரசித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்திருந்தார், ஆனால் கடந்த 2 போட்டிகளாக அவர்தான் இந்திய அணியில் அதிக ரன்களை கொடுக்கும் வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். மாறாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் சொதப்பிய ஆகாஷ் தீப் இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் வந்து 10 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் திருப்புமுனையாக அமைந்தார்.
எனவே, ஐபிஎல் தொடரில் விளையாடியதை வைத்து கணக்கிடாமல் சிகப்பு பந்து கிரிக்கெட்டில் அவர்களின் அனுபவம், திறன் மற்றும் சமீபத்திய ஃபார்ம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு நம்பர் 3 இடத்தில் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பளிப்பதே சரியாக இருக்கும்.