ஆஸ். ஒருநாள் தொடர்! ரோஹித் சர்மா நீக்கம்? பிசிசிஐ அதிரடி முடிவு!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக, இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த ஒருநாள் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் X பதிவில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எப்படியாவது 2027 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தயாராகும் இந்திய அணியில் இந்த மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஸி பயணம்

விராட் கோலிக்கு பிறகு ரோஹித் ஷர்மா 2022 முதல் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். 2023 உலகக் கோப்பையில் ஒரு தோல்வி கூட சந்திக்காத நிலையில், இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை வெல்ல தவறினார். இது தவிர பல சீரிஸில் பல முக்கிய வெற்றிகளுக்கு ரோஹித் சர்மா அணியை வழிநடத்தியுள்ளார். ரோஹித் தலைமையில், இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராஃபியை வென்றது. மேலும் 2024 டி20 உலக கோப்பையை வென்றது. ஒருநாள் போட்டிகளில் 40-க்கு மேல் சராசரி மற்றும் 120 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் ரோஹித் இந்திய அணியின் சிறந்த ஒருநாள் வீரராக இருந்து வருகிறார். இருப்பினும், 2027 உலகக் கோப்பை வரை ரோஹித் உடல் தகுதி நிலையாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. இதன் காரணமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விவாதத்தை தூண்டியுள்ளது.

ஷுப்மன் கில்: புதிய நம்பிக்கை

25 வயதான ஷுப்மன் கில் ஏற்கனவே டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடரிலும் கில் கேப்டனாக செயல்படலாம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா தொடரில் கில் இந்திய அணியை வழிநடத்தினால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரு வடிவங்களிலும் இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்பார். தற்போது கில் ஒருநாள் போட்டிகளில் டாப் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் குஜராத் அணியை சிறப்பாக வழிநடத்தியதன் பின்பு கில்-க்கு இந்திய அணியில் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நவம்பர் 2025-ல் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில், கில் புதிய உத்திகளுடன் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவாதத்தை கிளப்பிய X பதிவு

ஒரு பிரபல பத்திரிகையாளரின் X பதிவு, கில்லை ஒருநாள் கேப்டனாக நியமிக்கும் முடிவு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) 2027 உலகக் கோப்பை திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறுகிறது. இந்த பதிவு, ரசிகர்களிடையே சண்டையை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது அவசியம் என்றும், மற்றொரு தரப்பு தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் ரோஹித்தின் அனுபவத்தை இழப்பது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவிக்கிறது.

மற்ற வீரர்களின் எதிர்காலம்

ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் ஒருநாள் அணியில் தொடர்ந்து இடம் பெறுவார்களா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் தொடரில் தன்னுடைய வாய்ப்பிற்காக நீண்ட நாட்களாக காத்துக்கொண்டுள்ளார். ஒருநாள் தொடரில் விராட் கோலி, 50-க்கு மேல் சராசரியுடன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், அவரது இடம் உறுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆஸ்திரேலியா தொடரில் ஷுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றால், இந்திய அணி புதிய பயணத்தை தொடங்கும். ரோஹித் ஷர்மாவின் அனுபவமும், கில்லின் இளமையும் இணையும் இந்த மாற்றம், 2027 உலகக் கோப்பைக்கு இந்தியாவை தயார்படுத்தும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.