Tamil Nadu Govt : தொழில்நுட்ப உலகில் புதிய மாற்றத்தை உருவாக்க களம் புகுந்திருக்கும் ஏஐ தொழில்நுட்பம் (செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்) குறித்து மாணவ, மாணவிகள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், அதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன, அதை வைத்து எப்படி கற்றுக்கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் தூத்துக்குடி எம்பி கனிமொழி முன்னெடுப்பில் மாணவ மாணவியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AL – Artificial Intelligence) தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, ” தூத்துக்குடி மாதிரிப்பள்ளியில் ஏஐ தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து கடந்த மூன்று மாதங்களாக எண்ணிக் கொண்டிருந்தோம். இந்த தொழில்நுட்பத்தின் தேவை ஏன்? மாணவர்கள் ஏன் இதை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறித்த்து தான் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும். ஏஐ தொழில்நுட்பம் குறித்து மாணவர்கள் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உயர்கல்வி முடித்து விட்டு வருகின்ற பொழுது இந்த உலகத்தை ஆட்சி செய்கின்ற பல்வேறு தொழில்நுட்பங்களில் ஏஐ தொழில்நுட்பம் மிக அதிகமாக இருக்கும். நாம் செய்கின்ற பெரும்பான்மையான வேலைகளில் இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் தான் செய்வோம். ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு பதிலாக இடங்கொள்ளும் என்று குறிப்பிடுவார்கள்.
ஆனால் ஏஐ தொழில்நுட்பம் தெரிந்த மனிதர்கள் உங்களுக்கு பதிலாக இடங்கொள்ளுவார்கள் என்று குறிப்பிடலாம். எனவே, ஏஐ தொழில்நுட்பம் குறித்து இப்பொழுது இருந்தே நீங்கள் உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக கற்றுக் கொள்ள தயாராக வேண்டும். அடிப்படைக்கான கல்வி கூறுகளை முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்காமல், நமக்கு புரிகின்ற மாதிரி எத்தனை முறை வேண்டுமானாலும், எளிமையாக கற்றுக் கொள்வதற்கு செய்முறை விளக்கங்களுடன் புரிந்து கொள்ளுவதற்கு எதுவாக ஏஐ தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்கும்.
ஏஐ தொழில்நுட்பம் குறித்து பல மில்லியன் பயன்பாடுகள் உள்ளது. குறிப்பாக நாம் இயல்பாக செய்கின்ற செயலை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்கின்ற பொழுது ஐந்து மடங்கு வேகமாக செய்து முடிக்கலாம். குறிப்பாக நமது அலுவலகங்களில் நீதிமன்றங்களுக்கு வழக்குகள் தயாரித்து வழங்க வேண்டும். வழக்குகளுக்கு எதிரான பதில்கள் தயாரிப்பது என்பது முக்கியமானதாகும். இது குறிப்பிட்ட சிலர் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள். இதனால் கால தாமதம் ஏற்படும். ஆனால் இதை தவிர்க்க கடந்த எழு மாதங்களுக்கு முன்னர் ஏஐ தொழில்நுட்பத்துடன் இதற்கு பதில் தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு பின்னர் அலுவலகத்தில் இருந்த அனைத்து வழக்குகளுக்கும் எதிரான பதில்கள் இரண்டு மாதங்களிலேயே கோப்புகள் தயார் செய்யப்பட்டு முடிக்கப்பட்டது. ஏஐ தொழில்நுட்பம் நமது காலத்தை சேமிக்கவும், வேலைத்திறனை பல மடங்கு உயர்த்துவதற்கு பயன்படும். இதுமட்டுமின்றி கணினித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட பல துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய பாடம் சம்பந்தமான கருத்துக்களை மிக எளிதாக எவ்வாறு கற்றுக் கொள்ள முடியும் என்பதையும், உதாரணத்துடன் மற்றும் செய்முறை விளக்கங்களுடன் நீங்கள் கற்க வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் அதிகமாக இதுகுறித்து கற்றுக் கொள்வீர்கள். உலகத்தில் உள்ள அனைத்து அறிவையும் அதற்குள் புகுத்து வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் சரியான முறையில் கேட்கின்ற பொழுது அது உங்களுக்கு சரியான தகவல்களை எடுத்துக் கொடுக்கும். மாணவர்களாகிய நீங்கள் கல்லூரி படிப்பை முடிக்கின்ற பொழுது மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கும். இப்பொழுதிருந்து நீங்கள் கற்கின்ற பொழுது ஏஐ தொழில்நுட்பம் குறித்த அறிவு வளர்ச்சி மிக எளிதாக இருக்கும். எனவே, இந்த வாய்ப்பை மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் கேட்டுக்கொண்டார்.