புதுடெல்லி,
இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்து நாட்டை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ந்தேதி புறப்பட்டனர்.
விண்ணில் ஏவப்பட்ட பால்கன்-9 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த டிராகன் விண்கலம், தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ந்தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதன் பிறகு அதனுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட டிராகன் விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சென்றனர்.
அவர்கள் 18 நாட்கள் தங்கி இருந்து 60 ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர். அவற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 7 சோதனைகள் அடங்கும். இந்தநிலையில், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் நேற்று மாலை 4.45 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.
விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது. இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதுபற்றி மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், ஆக்சியம்-4 வரலாற்று திட்டத்தில் கேப்டன் சுபான்ஷு சுக்லா நல்ல முறையில் பூமிக்கு திரும்பியது, ஒவ்வோர் இந்தியனுக்கும் ஒரு பெருமையான தருணம்.
அவர் விண்வெளியை தொட்டு விட்டது மட்டுமில்லாமல், இந்தியாவின் விருப்பங்களை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான அவருடைய பயணம் மற்றும் பூமிக்கு திரும்பி வந்தது என்பது, தனிப்பட்ட மைல்கல்லாக மட்டுமின்றி, இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி நோக்கங்களுக்கு ஒரு பெருமையான தருணமும் ஆகும். அவருடைய வருங்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.