சூர்யாவின் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான மாதம். இந்த ஜூலை 23-ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் வருகிறது. அதிலும் இது அவரது 50-வது பிறந்தநாள் என்பதால் இன்னும் ஸ்பெஷலான, ஆச்சரியமான அப்டேட்கள் வெளிவரக் காத்திருக்கிறது.
கடந்த ஆண்டில் சூர்யாவின் பிறந்த நாளின் போது தமிழகம், கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களிலிருந்தும் 3,500க்கும் மேலான ரசிகர்கள் இரத்த தானம் செய்திருந்தனர். அவர்கள் அனைவரையும் நேரில் வரவழைத்து சூர்யாவும் கௌரவித்திருந்தார். அதைப் போல இந்தாண்டும் 5 ஆயிரம் ரசிகர்கள் இரத்த தானம் செய்ய உள்ளதாக சொல்கிறார்கள். தவிர சைக்கிள், தையல் மிஷின், நோட்டு புத்தகம் என நலத்திட்ட உதவிகளும் செய்ய ரெடியாகி வருகின்றனர்.

சூர்யாவின் ரசிகர்கள் இரத்த தானம் செய்வதில் இவ்வளவு ஆர்வம் காட்ட காரணம், இரத்த தானம் செய்த ரசிகர்களிடம் அவர் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவது தான்.
சமீபத்தில் நடந்த ‘ரெட்ரோ” படத்தின் விழாவில் கூட, ” ஒரு மூவாயிரம் பேரை சந்தித்து அவர்களை கட்டிப்பிடித்து நான் போட்டோ எடுத்துக் கொண்டேன். எனது வாழ்க்கை அரை நூற்றாண்டை நெருங்குகிறது. ஆனால் வந்தவர்கள் அனைவரும் 20 வயதுதான் இருந்தார்கள். என் மீது அக்கறையுடன் நலம் விசாரித்தார்கள். அவர்களின் அன்பு போதும் எப்போதும் நன்றாக இருப்பேன்” என்று பேசியிருந்தார்.

அந்த அன்பை காட்ட ஒரு சந்தர்ப்பமாக ரசிகர்கள் இரத்த தானம் செய்வதில் முனைப்பு காட்டுகின்றனராம்.
இந்த பிறந்தநாள் ஸ்பெஷலாக ஆர்.ஜே.பி. இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளிவர காத்திருக்கிறது என்கிறார்கள். ‘கருப்பு’ படத்தில் த்ரிஷா, யோகி பாபு, நட்டி நட்ராஜ், ‘லப்பர் பந்து’ சுவாஸ்விகா, ‘நெடுஞ்சாலை’ ஷிவதா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் என பலரும் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாய் அபயங்கரின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இது தவிர, ‘லக்கி பாஸ்கர்’ இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங்கும் ஹைதரபாத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவின் ஜோடியாக மமிதா பைஜூ, வில்லியாக ரவீணா டாண்டன், அம்மா ரோலில் ராதிகா என பலரும் நடித்து வருகிறார்கள். ஒரு மாதத்திற்கும் மேலாக அதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்திருக்கிறது. ஆனாலும், சூர்யா தனது பிறந்த நாளில் சென்னையில் தான் இருக்கிறார்.
அன்று ‘அயன்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘வீடோக்கடெ’ படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது. பிறந்த நாளில் வெங்கி அட்லூரி படத்தின் தலைப்பும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைப் போல, வெங்கி அட்லூரியின் படம் குறுகிய கால படப்பிடிப்பாக திட்டமிட்டுள்ளதால், இன்னும் இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்போடு மொத்த படமும் நிறைவடைந்து விடும் என்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…