வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பல்வேறு நாடுகள் மீதும் அதிரடியாக வரிகளை விதித்தார். கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை டிரம்ப் வெளியிட்டார். இதனால் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதன்காரணமாக அமெரிக்க அரசின் வரி விதிப்பு திட்டம் கடந்த 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் தற்போது, ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் 14 நாடுகளுக்கான புதிய வரி விகிதங்களை அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்டது. இதன்படி ஜப்பானுக்கு 25 சதவீதம், வங்கதேசத்துக்கு 35 சதவீதம் விதிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. முன்னதாக கடந்த ஏப்ரலில் வெளியிட்ட அறிவிப்பின்போது இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்பட்டது.
இந்தியாவுடன் வரி விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நெருங்கிவிட்டோம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதனால் இருநாடுகளுக்கும் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் எனத்தெரிகிறது.