பாட்னா,
பீகாரில் பா.ஜ.க. கூட்டணியுடன் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், பாட்னாவின் பராஸ் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று திடீரென உள்ளே புகுந்து நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த சிறை கைதியை சுட்டு விட்டு தப்பிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திரைப்பட பாணியில் நடந்த இந்த சம்பவத்தில், 5 பேர் துப்பாக்கிகளை இடுப்பில் மறைத்து வைத்தபடி இன்று காலை ஆஸ்பத்திரியின் உள்ளே நுழையும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அவர்கள் 5 பேரும் துப்பாக்கிகளை எடுத்து, நோயாளி சிகிச்சை பெறும் ஐ.சி.யு. அறைக்கதவை திறந்து, உள்ளே செல்கின்றனர். சிகிச்சையில் இருந்த சந்தன் மிஷ்ரா என்பவரை சுட்டு விட்டு கும்பலாக தப்பினர். சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்து ஒருவர் என்ன நடக்கிறது என்பதற்காக வெளியே வந்து பார்க்கிறார்.
ஆனால், எதுவும் நடக்காததுபோல் அவர்கள் சந்தனின் அறையில் இருந்து வெளியேறி சென்றனர். சந்தனுக்கு எதிராக 30-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. மருத்துவ காரணங்களுக்காக பரோலில் அவர் வெளியே வந்துள்ளார். இதனை பயன்படுத்தி இந்த கொலை சம்பவம் நடத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி மூத்த போலீஸ் சூப்பிரெண்டு கார்த்திகேய சர்மா கூறும்போது, எதிரி கும்பலை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என கூறினார். இந்த சம்பவத்தில் மருத்துவமனையின் காவலர்களுக்கு ஏதேனும் தொடர்பு உண்டா? என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம். சந்தன் ஷெரு கும்பலை அடையாளம் கண்டிருக்கிறோம் என போலீசார் கூறினர்.
அதிக பாதுகாப்புடன், தீவிர சோதனைக்கு பின்னரே ஒவ்வொரு தனி நபரும் ஆஸ்பத்திரியின் உள்ளே அனுமதிக்கப்படும் சூழலில் இந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்புகிறது என டி.ஜி.பி. விநய் குமார் கூறியுள்ளார்.
பீகாரில் கடந்த சில வாரங்களில் தொழிலதிபர் கோபல் கெம்கா, பா.ஜ.க. மூத்த தலைவர் சுரேந்திர கெவாத் மற்றும் வழக்கறிஞர் ஜிதேந்திரா மஹதோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கான நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.