லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
இதில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் லார்ட்சில் நடைபெற்றது. இந்த போட்டியை நேரில் காண இந்திய வீரர் ஜிதேஷ் சர்மா லார்ட்ஸ் சென்றிருந்தார். அப்போது ஜிதேஷ் சர்மாவை லார்ட்ஸ் மைதான ஊழியர்கள் யார் என்று தெரியாமல் தடுத்து நிறுத்தியதாகவும் அவர்தான் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்று என்று பலமுறை கூறியும் பாதுகாவலர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் உள்ளே அனுமதிக்க வில்லை என்றும் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பரவியது.
அதுமட்டுமின்றி ஜிதேஷ் சர்மா, அங்கு வர்ணனையாளர் பிரிவில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக் வந்து அவரை அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பலரது மத்தியில் பல விதமான கேள்வியை எழுப்பியது.
இந்நிலையில் அந்த சமயத்தில் அங்கு என்ன நடந்தது? என்பது குறித்து தினேஷ் கார்த்தில் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில், “சமூக ஊடகங்களில் பலர் எதிர்கொள்ளும் சில சிக்கல்கள் இவை. நான்தான் ஜிதேஷ் சர்மாவை அழைத்தேன். நான் அவரை வர்ணனையாளர் அறையின் (கமெண்ட்ரி பாக்ஸ்) கீழே சந்தித்தேன். பிறகு அவரை என்னுடன் அழைத்துச் சென்று அங்குள்ள அனைவரையும் சந்திக்க வைத்தேன். அந்த வீடியோவில் இருப்பது மைதானத்தில் நுழைவு வாயில் கிடையாது. அது நாங்கள் வர்ணனை செய்யும் இடத்திற்கு கீழே உள்ளது” என்று கூறினார்.