பாட்னா: தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்படி, சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) ஒரு பகுதியாக, பிஹார் மாநிலத்தில் 12,000 க்கும் மேற்பட்ட புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
பிஹார் மாநில தேர்தல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மாநிலத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 77,895 இலிருந்து 90,712 ஆக உயர்ந்துள்ளது என்றும், 12,817 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
புதிதாக அமைக்கப்படவுள்ள 12, 817 வாக்குச்சாவடிகளில், 12,479 வாக்குச்சாவடிகள் ஏற்கனவே அமைந்துள்ள அதே கட்டிடம் அல்லது வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 338 வாக்குச்சாவடிகள் தனியாக அமைக்கப்படவுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் மாவட்ட வாரியான பட்டியல் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில், எந்தவொரு வாக்குச்சாவடியிலும் 1,200 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை என்பதை உறுதி செய்து, புதிய வாக்குச் சாவடிகளுக்கான தேவையை மதிப்பிடுமாறு தேர்தல் பதிவு அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.
ஜூலை 25 வரை காலக்கெடு உள்ள நிலையில், பிஹாரில் இதுவரை சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ் 95.92% வாக்காளர்கள் தங்களை பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹாரில் உள்ள 7.9 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், இறந்தவர்கள் உட்பட முகவரியில் அடையாளம் காணப்படாதவர்களின் எண்ணிக்கை 41.64 லட்சத்தை எட்டியுள்ளது.