ஒபாமாவை கைது செய்து ஜெயிலில் அடைப்பது போன்ற ஏ.ஐ.வீடியோ: டிரம்ப் வெளியிட்டதால் சர்ச்சை

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போப் ஆண்டவர் தோற்றத்தில் டிரம்ப் இருப்பது போன்று செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் உருவான படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

தற்போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவை கைது செய்து சிறையில் அடைத்தது போன்று சித்தரிக்கும் வீடியோ காட்சியை டிரம்ப் வெளியிட்டு இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டுரூத் சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் பராக் ஓபாமாவை ஒவல் அலுவலகத்தில் அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கை விலங்கிட்டு கைது செய்வது போலவும், இதனை அருகில் அமர்ந்து டிரம்ப் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவில் சிறையில் உள்ள அறையில் கம்பிகளுக்கு பின்னால் பராக் ஒபாமா கைதி உடையில் இருப்பது போன்றும் உள்ளன. இந்த பதிவில் டிரம்ப் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த காணொளி கற்பனை ஆனது என்று டிரம்ப் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

2016-ம் ஆண்டில் தேர்தலில் மோசடி செய்ததாக டிரம்ப் நிர்வாகம் ஒபாமா மீது ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது. இந்த சூழ்நிலையில், ஒபாமாவை கைது செய்வது போன்ற ஏ.ஐ. வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி கடும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். டிரம்பை பொறுப்பற்றவர் என அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.