மிர்புர்,
வங்காளதேசம் – பாகிஸ்தான் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மிர்புரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 110 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பகர் ஜமான் 44 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன தன்சித் ஹசன் ஒரு ரன்னிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த பர்வேஸ் ஹொசைன் எமோன் – டோஹித் ஹிரிடோய் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இலக்கு குறைவானது என்பதால் இருவரும் நிதானமாகவும் அதே நேரத்தில் பொறுப்புடனும் விளையாடினர். பாகிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளித்த இந்த ஜோடி இலக்கை நெருங்கும்போது பிரிந்தது. டோஹித் ஹிரிடோய் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே எமோன் அரைசதம் விளாசினார்.
வெறும் 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த வங்காளதேசம் 112 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எமோன் 56 ரன்களுடனும், ஜேக்கர் அலி 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.