ஐபிஎல் 2025 சீசனில் 17 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு கட்டி, தங்களது முதல் கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில் அடுத்த சீசனில் தங்களது கோப்பையை தக்க வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக அணியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில வீரர்களை டிரேட் மூலம் பெறுவது ஆர்சிபிக்கு சிறந்த தேர்வாக இருக்கும். சிஎஸ்கேவின் சிவம் தூபே, ரவிச்சந்திரன் அஷ்வின், கலீல் அகமது ஆகிய மூன்று வீரர்கள் ஆர்சிபி அணியின் பலவீனங்களை நிவர்த்தி செய்யும் வகையில் சரியான பொருத்தமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவம் தூபே
ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டரில் ஸ்பின்னர்களை அடித்து ஆடும் வீரர்கள் இல்லாமல் இருந்தனர். கடந்த சீசனில் இது தெளிவாகத் தெரிந்தது. இதை நிவர்த்தி செய்ய சிவம் தூபே சிறந்த தேர்வாக இருப்பார். சிஎஸ்கேவில் 33.95 சராசரியுடன் 151.6 ஸ்ட்ரைக் ரேட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார் துபே. இடது கை பேட்ஸ்மேனான தூபே, ஸ்பின்னர்களை சிக்ஸர்களால் பறக்கவிடும் திறன் கொண்டுள்ளார். ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருடன் இணைந்து இவர் அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்த முடியும். டிரேட் மூலம் இவரைப் பெறுவது ஆர்சிபிக்கு சாதகமாக இருக்கும். தூபே ஆர்சிபியில் இருந்த காலத்தில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், சென்னை அணியில் அவர் புதிய உச்சத்தை எட்டியுள்ளார். ஆர்சிபி இவரை டிரேட் செய்தால் அணியின் ஒட்டுமொத்த பேலன்ஸை மேம்படுத்தும்.
ரவிச்சந்திரன் அஷ்வின்
ஆர்சிபி அணியின் ஸ்பின்னர்களாக கிருனால் பாண்டியா மற்றும் சுயாஷ் ஷர்மா மட்டுமே உள்ள நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வினை சேர்ப்பது சிறந்த தேர்வாக இருக்கும். அஷ்வினின் அனுபவம் ஆர்சிபி பந்துவீச்சை வலுப்படுத்தும். சிஎஸ்கேவில் இருந்து அஸ்வின் கழட்டிவிடப் படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆர்சிபி இவரை டிரேட் செய்தால் பேட்டிங் ஆர்டரையும் வலுப்படுத்தலாம். கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் ஆர்சிபி ரசிகர்கள் அஷ்வினை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். இருப்பினும் அது நடக்கவில்லை. இந்நிலையில் டிரேடு மூலம் சாத்தியம் ஆகலாம்.
கலீல் அகமது
ஆர்சிபி அணியின் பந்துவீச்சு பிரச்சினையை தீர்க்க ஜோஷ் ஹேசல்வுட் ஒரு தீர்வாக இருந்தார். ஆனால், மற்ற யாரும் அவ்வளவு சிறப்பாக பந்துவீசவில்லை. இந்நிலையில் கலீல் அகமது அவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். சிஎஸ்கேவில் 2025 சீசனில் 15 விக்கெட்டுகள் வீழ்த்திய கலீல், பவர்ப்ளேயில் 10 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல், புதிய பந்தில் சிறப்பாக செயல்படுகிறார். ஆர்சிபி இவரை டிரேட் செய்தால், பந்துவீச்சு தாக்குதலை வலுப்படுத்தலாம். டிரேட் விண்டோ தொடங்க உள்ள நிலையில், இந்த வாய்ப்புகளை ஆர்சிபி பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.