"சிவாஜி இறந்தாலும் பொங்கல் சீர் இப்பவும் வந்துட்டிருக்கு!"- பெருமாள் முதலியார் பேரன் பேட்டி

திரையை அல்ல திரையுலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த படம் ‘பராசக்தி’. கருணாநிதியின் கட்டுக்கடங்காத காட்டுத்’தீ’ திரைக்கதை, வசனத்தில் சமூக அவலங்களை சுட்டெரித்த புரட்சித்’தீ’. திரையுலத்தின் வெற்றி திலகமான, ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனையே அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் ‘பராசக்தி’ படத்தின் தயாரிப்பாளர் ‘நேஷனல் பிக்சர்ஸ்’ பெருமாள் முதலியார்.

அதனால்தான், தன்னை திரையில் அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியார் வீட்டிற்கு ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் சென்று பொங்கல் சீர் வழங்கி ஆசீர்வாதம் வாங்கி வந்திருக்கிறார் நடிகர் திலகம். அவர் மறைந்து இத்தனை வருடங்கள் கடந்தாலும், பிரபு, ராம்குமார் மூலம் பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு இப்போதும் சீர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதுவும், நேரில் சென்று வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில், இன்று ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் நினைவுநாளையொட்டி , பெருமாள் முதலியார் பேரன் கார்த்திகேயனிடம் பேசினேன்..

நேஷனல் பிக்சர்ஸ் கார்த்திகேயன்

“தமிழ் சினிமாவை ‘பராசக்தி’ படத்திற்கு முன்பு, பின்பு என இரண்டாகப் பிரிக்கலாம். அந்தக் காலத்தில் பாடத்தெரிந்தவர்கள்தான் நாயகர்களாக இருந்தார்கள். சினிமாவுக்கென்று தனி உரையாடல் மொழியும் இருந்தது. அந்த மரபுகளையெல்லாம் ’பராசக்தி’ உடைத்து, மக்கள் சாதாரணமாக பேசும் மொழியில் அமைந்தது. படத்தில், சமூக முற்போக்குக் கருத்துகள் இடம்பெற்றதால் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. சிவாஜி நடிக்கக்கூடாது எனப் பலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். ’சிவாஜி நடிக்கலைன்னா இந்தப் படத்தையே தயாரிக்க மாட்டேன்’னு உறுதியா இருந்தார், என் தாத்தா பெருமாள் முதலியார்.

ஆறு மாதம் படப்பிடிப்பையே நிறுத்திவிட்டு நடிகர் திலகத்துக்கு, எல்லா பயிற்சியும் கொடுத்து ஹீரோவுக்கான கட்டமைப்பை உருவாக்கினார். நடிகர் திலகத்தின் நாடகங்களைத் தொடர்ச்சியாக பார்த்துவந்ததால், அவர்மீது தாத்தாவுக்கு அதீத நம்பிக்கை உண்டு. அதன்படியே, படத்தைத் தயாரித்து நடிகர் திலகத்தை வெற்றி திலகமாக்கினார். தன்னை நடிகராக்கிய தாத்தா மீது நடிகர் திலகம் அதீத அன்பும் நன்றியுணர்வும் கொண்டிருந்தார்.

தாத்தா பெருமாள் முதலியாருக்கு, என்னோட அம்மா அல்லி ஒரே மகள். எங்கம்மாவின் திருமணம் மட்டுமல்ல. என் திருமணத்துக்கும், தங்கை திருமணத்துக்கும் வந்து ஆசீர்வாதம் செய்தவர் நடிகர் திலகம். தாத்தாவின் வீடு மைலாப்பூரில் இருந்தது. ஒவ்வொரு வருடமும் தாத்தாவுக்கு பொங்கல் சீர் எடுத்து வந்து தாத்தாவைப் பார்த்து பேசி, மகிழ்ந்துவிட்டுத்தான் செல்வார் நடிகர் திலகம். தாத்தா, உடல் நலம் சரியில்லாம அப்போலோவில் அட்மிட் ஆகியிருந்தபோது, ’திரிசூலம்’ படத்தின் ஷூட்டிங் சிம்லாவில் நடந்துக்கிட்டிருந்தது.

பெருமாள் முதலியார் மகளுடன் பிரபு

ஷூட்டிங் கிளம்பும்போது, மருத்துவமனைக்கே வந்து உடல்நலம் விசாரித்துவிட்டு ஷூட்டிங் கிளம்பினார். அடுத்த ஒரு வாரத்திலேயே தாத்தா இறந்துட்டார். உடனே, ஷூட்டிங்கை கேன்சல் செய்துட்டு சிம்லாவிலிருந்து கதறியபடி ஓடிவந்தார். இத்தனைக்கும், அப்போது நடிகர் திலகம் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். குருசாமியான நம்பியாரிடம், ‘எனக்கு வாழ்வளித்த என் ஆசான் இறந்துவிட்டார். அதனால், நான் மாலையை கழட்டிடுறேன்’ என சொல்லி, தாத்தாவின் இறுதிச்சடங்கு முடியும்வரை இருந்தார். தாத்தா மறைவுக்குப்பிறகு பாட்டி 1982-ம் ஆண்டு வேலூருக்கே வந்துட்டாங்க. ஆனாலும், நடிகர் திலகத்தின் பொங்கல் சீர் மட்டும் தொடர்ந்துகொண்டிருந்தது.

வருடா வருடம் வேலூரிலுள்ள எங்கள் வீட்டுக்கு கமலா அம்மாவுடன் பொங்கல் சீர் கொண்டுவந்துடுவார். பட்டுப்புடவை, பட்டுவேட்டி, சட்டை, பூ, பழங்கள், ஆளுயர மாலையோட வந்து தாத்தா படத்துக்கு மாலை போட்டு வணங்குவார். காலை உணவு எங்க வீட்லதான். பாட்டியோட சக்கரை பொங்கல், உளுந்தவடை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். எங்களோட படிப்பு, தியேட்டர் பற்றியெல்லாம் விசாரிப்பார். இப்போ அவர் இறந்தபிறகும், ராம்குமார் அண்ணன், பிரபு அண்ணன் வருடா வருடம் வந்து பொங்கல் சீர் கொடுக்கிறாங்க. வாழும் காலம்வரை தாத்தா மீது மிகப்பெரிய மதிப்பும் நன்றியுணர்வுடனும் இருந்தவர் நடிகர் திலகம். அவர் மறைந்தபிறகும்கூட அவரது வாரிசுகள் அந்த மரியாதையைத் தொடர்ந்துக்கிட்டே இருப்பது எங்களுக்கு பிரமிப்பா இருக்கு. பிரபு அண்ணா எப்போ வேலூர் வந்தாலும் எங்களை வந்து பார்ப்பார். எங்களையும் அவர் வீட்டுக்கு வரவெச்சு விருந்தெல்லாம் வெச்சிருக்கார். பாசக்கார அண்ணன்” என்று நெகிழ்பவரிடம் ”பெருமாள் முதலியாரின் நேஷனல் பிக்சர்ஸ் மீண்டும் பட தயாரிப்பில் இறங்கும் திட்டம் உள்ளதா? என்றோம்,

“தாத்தா உயிருடன் இருக்கும்வரை சமூக சீர்திருத்தம் மற்றும் வித்தியாசமான படங்களைத்தான் தயாரித்தார்; விநியோகம் செய்தார். அவர், கடைசிவரை நாத்திகவாதியா வாழ்ந்ததாலதான் ’பராசக்தி’, ’ரத்தக்கண்ணீர்’ மாதிரியான படங்களை உணர்வுப்பூர்வமா தயாரிக்கமுடிஞ்சது. தாத்தா மறைவின்போது, கலைஞருக்கு கண் ஆபரேஷன் பண்ணியிருந்ததால நேர்ல வரமுடியல. ஆனா, எங்களுக்கு அனுதாபச் செய்தி அனுப்பியதோடு முரசொலியில் கட்டுரையும் எழுதியிருந்தார். எம்.ஜி.ஆர் எங்க வீட்டுக்கு நேரடியா வந்து ஆறுதல் சொல்லிட்டுப் போனார். நடிகர் திலகத்தை மட்டுமல்ல, எம்.ஆர். ராதாவையும் ’ரத்தக்கண்ணீர்’ படம் மூலமாக அறிமுகப்படுத்தியவர் தாத்தா.

தன் படத்து தயாரிப்பாளர் பெரியார் கொள்கை பிடிப்புடன் இருக்கிறாரே என்ற பெருமையும் மதிப்பும் தாத்தா மீது கொண்டிருந்தார் எம்.ஆர் ராதா. அண்ணா ஆட்சிக் காலத்தில் நிறைய பதவிகள் தாத்தாவைத் தேடிவந்தன. தாத்தா எதையும் ஏற்கல. சென்னைல தாத்தாவுக்கு சொந்த வீடுகூட கிடையாது. சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். யாரிடமும் எதையும் எதிர்பார்த்ததில்லை. நாங்களும் அப்படித்தான்.

‘பராசக்தி’யை தொடர்ந்து நடிகர் திலகத்தின் ‘பெற்றமனம்’ படத்தையும் தாத்தா தயாரிச்சார். கடைசியா தயாரிச்ச 1972-ல் ‘தங்கதுரை’ படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கல. அதனால, படம் தயாரிப்பதை நிறுத்திட்டு ’இளமை ஊஞ்சலாடுகிறது’, ’கிழக்கே போகும் ரயில்’, ’சட்டம் என் கையில்’ போன்ற பல படங்களை தாத்தா விநியோகம் செய்தார்.

பெருமாள் முதலியார்

தாத்தா 1978-ல் இறந்தார். அவருக்குப்பிறகு எங்கக் குடும்பம் விநியோகம் செய்துட்டும் நேஷனல் தியேட்டரைப் கவனித்தும் வந்தது. 2000 த்திற்குப் பிறகு படங்கள் விநியோகம் செய்வதை நாங்களும் நிறுத்திட்டோம். சினிமாவுல நிறைய மாற்றங்கள் வந்துடுச்சு. 100 கோடி, 200 கோடி பட்ஜெட்ல எடுக்கிறாங்க. எங்களை மாதிரி சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு சிரமம். இப்போதைக்கு தயாரிப்புல இறங்குற எண்ணமெல்லாம் இல்ல” என்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.