ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன், சீகெம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியும், 4ஆவது இடத்தில் உள்ள மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில் வெற்றிபெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என்ற நிலையில், இரு அணிகளும் களமிறங்கின. டாஸ் வென்ற ஊசுடு அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்ததை அடுத்து, மாஹே அணி பேட்டிங் புகுந்தது. மாஹே அணியினர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர்.
அஹில் கச்ரு 19 (12) ரன்களில் வெளியேற, அஜய் ரொஹேரா மற்றும் ராகவன் இருவரும் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தனர். பின்னர், ராகவன் 38 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனாலும், மாஹே வீரர்கள் 10 ரன்ரேட்டிற்கு மேல் ஆடி வந்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அஜய் ரொஹேரா 54 பந்துகளில் (4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்) 94 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதேபோல, ஸ்ரீகரன் 9 பந்துகளில் (4 சிக்ஸர்கள்) 27 ரன்களில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் மாஹே அணி 5 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது.
பின்னர் 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஊசுடு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால், பவர்பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்தனர். ஆனால், 7ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ஜஷ்வந்த் ஸ்ரீராம் 28 (16) ரன்களில் வெளியேறினார். இதையடுத்த ஓவரிலேயே கங்கா ஸ்ரீதர் ராஜூ 42 (26) ரன்களிலும், சிதக் சிங் 2 (3) ரன்களிலும், கிருஷ்ணா பாண்டே 9 (5) என அடுத்தடுத்து வெளியேற 9 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்தது. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
சிறிது நேரம் அதிரடி காட்டிய புனீத் திரிபாதி 42 (17 பந்துகள், 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரி) ரன்கள் எடுத்து போல்டானார். கடைசி 6 ஓவர்களில் 73 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பின்னர் வந்த வீரர்கள் பெரியளவில் சோபிக்காததால் ஊசுடு அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், மாஹே அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 10 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வியை தழுவிய ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி போட்டியில் இருந்து வெளியேறியது. 94 ரன்கள் குவித்த அஜய் ரொஹேரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இது குறித்து கூறிய ரொஹேரா, “இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தோம். ஏறக்குறைய எலிமினேட்டர் போன்று வாழ்வா, சாவா என்ற சூழ்நிலை இருந்தது. போட்டியை வெற்றிகரமாக முடித்ததில் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம். கடந்த சீசனில் நாங்கள் கோப்பையை வென்றிருந்தோம். எனவே, இந்த சீசனிலும் அணி நிர்வாகம் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது. அதேபோல், நாங்களும் அவர்கள் வைத்த நம்பிக்கைக்கு ஏற்றார்போல பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுள்ளோம்” என்றார்.
மேலும் படிங்க: SENA நாடுகளில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் அடித்த 6 வீரர்கள்!
மேலும் படிங்க: இந்திய அணிக்கு ஆப்பு உறுதி… டெஸ்டில் 5 நாள்களும் மழைக்கு வாய்ப்பு – இதுகளும் சதி பன்னுதே!