வாஷிங்டன்,
‘ஆப்பிள்’ நிறுவனத்தின் இணைநிறுவனரான மறைந்த தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் லாரன் போவெல் தம்பதியின் மகள் ஈவ் ஜாப்ஸ்(வயது 27). ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், மாடலிங் துறையில் கால்பதித்து, முன்னணி பிராண்ட்டுகளின் மாடலாக திகழ்ந்து வருகிறார்.
6 வயதில் இருந்து குதிரையேற்ற பயிற்சிகளை பெற்று வரும் ஈவ் ஜாப்ஸ், பல்வேறு குதிரையேற்ற போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த இவர், கொரோனா பரவல் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். 2019-ம் ஆண்டு, 25 வயதுக்கு உட்பட்ட உலகின் தலைசிறந்த குதிரையேற்ற வீராங்கனைகளின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்தார்.
ஈவ் ஜாப்சின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது. அதே சமயம், அவரது தாயின் சொத்து மதிப்பு சுமார் 21.7 பில்லியன் டாலராக இருந்தாலும், அதில் ஈவ் ஜாப்சுக்கு எந்த பங்கீடும் இருக்காது என்று லாரன் போவேல் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில், ஈவ் ஜாப்சின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற குதிரையேற்ற வீரர் ஹாரி சார்லஸ் என்பவர் ஈவ் ஜாப்ஸ் கரம்பிடிக்க உள்ளார். சுமார் 6.7 மில்லியன் டாலர் செலவில் ஆடம்பரமான முறையில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த திருமண விழாவில், ஸ்டீவ் ஜாப்ஸ் குடும்பத்தினரின் நெருங்கிய நட்பு கொண்டவரான முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள உள்ளார். மேலும் விழாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் எல்டன் ஜானின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.