செம்ஸ்போர்டு,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் ஆரம்பமானது. இதில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) செம்ஸ்போர்டில் 20-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 309 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 279 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் 30 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 324 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 355 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷி கோல்டன் டக் ஆகி ஏமாற்றினார். இருப்பினும் கேப்டன் ஆயுஷ் மாத்ரே அதிரடியில் பட்டையை கிளப்பினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த அபிக்யான் குண்டு 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக் ஆடிய ஆயுஷ் மாத்ரே 126 ரன்களில் (80 பந்துகள்) ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 290 ரன்கள் அடித்திருந்தபோது கடைசி நாள் (4-வது நாள்) ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.