அணியில் இருந்து விலகல்? 4வது டெஸ்ட் முடிந்த பிறகு கம்பீர் கொடுத்த முக்கிய அப்டேட்!

பரபரப்பாக நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. 2வது இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்து தோல்வியை தவிர்த்துள்ளனர். இந்நிலையில், தோல்வியடைவதை தவிர்த்த இந்திய அணியின் போராட்ட குணத்தை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். 4வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு மான்செஸ்டரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கம்பீர், “பலர் எங்களிடம் ஒன்றும் இல்லை என்று புறம் தள்ளினர். ஆனால் இந்த அணி நாட்டு மக்களுக்காக போராடும் என்ற ஒரு அடித்தளத்தை அமைத்துள்ளது” என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும், காயமடைந்த ரிஷப் பந்த் இறுதிப் போட்டியிலிருந்து விலகியதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

மேலும் படிங்க: Rishabh Pant: இன்று ரிஷப் பண்ட் பேட்டிங் செய்வாரா? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

விமர்சகர்களுக்கு பதிலடி

மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வி அடையும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், போட்டியை டிரா செய்தது. இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தாலும், தொடரை வெல்லும் வாய்ப்பை இந்தியா உயிர்ப்புடன் வைத்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் கம்பீர் பல முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். “இந்த அணியினர் யாரையும் பின்பற்ற விரும்பவில்லை; அவர்கள் தங்கள் சொந்த வழியை உருவாக்குகிறார்கள். நாட்டு மக்களுக்காகப் போராட விரும்புகிறார்கள். போட்டிக்கு முன்பு எங்களை எப்படி எல்லாம் குறைத்து மதிப்பிட்டார்களோ, அதையெல்லாம் உடைத்து, இந்த அணி ஒரு புதிய அடித்தளத்தை அமைத்துள்ளது” என்றார்.

மேலும், அணி தேர்வு குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த கம்பீர், “நாங்கள் யாரையும் அணியிலிருந்து நீக்குவதில்லை. சிறந்த 11 வீரர்களையே தேர்வு செய்கிறோம். இந்த இங்கிலாந்து பந்துவீச்சுக்கு எதிராக 3-வது இடத்தில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருப்பது நல்லது என்று நினைத்தோம். அதே போல, மேகமூட்டமான சூழலில் அன்ஷுல் கம்போஜ் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்பியே அவரைத் தேர்வு செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் விலகல்

ரிஷப் பந்தின் காயம் குறித்துப் பேசிய கம்பீர், “கால் உடைந்த நிலையிலும் பேட்டிங் செய்த அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இது தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட வேண்டிய ஒரு விஷயம். அவர் ஓவல் டெஸ்டில் விளையாட மாட்டார் என்பது துரதிர்ஷ்டவசமானது” என்று உறுதிப்படுத்தினார். அதே சமயம், ஜஸ்பிரித் பும்ராவின் உடற்தகுதி குறித்துக் கேட்டபோது, “அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் தற்போது ஃபிட்டாக உள்ளனர்” என்று தெரிவித்தார். இது இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் பெரும் பலமாக அமையும்.

ஷுப்மன் கில் சதம்

இந்த தொடரில் தனது நான்காவது சதத்தை அடித்த கேப்டன் ஷுப்மன் கில்லைப் பாராட்டிய கம்பீர், “ஷுப்மன் கில்லின் திறமை மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. கேப்டன்சி அழுத்தம் அவருக்கு ஒரு சுமையாக இல்லை” என்றார். மேலும் சதம் அடித்த ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் குறித்தும் பேசிய கம்பீர், “ஒருவர் 85 அல்லது 90 ரன்களில் பேட்டிங் செய்யும்போது, அவர்களை சதம் அடிக்க விடாமல் இருக்க முடியுமா? அவர்கள் இருவரும் சதத்திற்கு தகுதியானவர்கள், அதிர்ஷ்டவசமாக அதை அடித்தனர்” என்று கூறினார்.

இறுதிப் போட்டி

ஓவல் டெஸ்ட் குறித்து பேசிய கம்பீர், “நான் முடிவுகளை மட்டுமே நம்புகிறேன். நாங்கள் இன்னும் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளோம். ஓவல் போட்டியில் வென்று, தொடரை 2-2 என சமன் செய்ய முயற்சிப்போம்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா போட்டியாக அமையவிருப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிங்க: இங்கிலாந்து தொடருக்கு இடையில் திடீர் ஓய்வை அறிவித்த 32 வயது வீரர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.