இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கையில் இருந்த போட்டியை இந்திய அணியின் வீரர்கள் தங்கள் பக்கம் இழுத்து டிரா செய்துள்ளனர். இதன் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடரை சமன் செய்ய இந்திய அணிக்கு ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி தேவைப்படுகிறது. அதே சமயம் இந்த தொடரை வெல்ல இங்கிலாந்து அணிக்கு ஐந்தாவது டெஸ்டில் வெற்றி தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது. இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Special comeback
Resolute batting performance
An incredible effort from #TeamIndia batters in the 2nd innings in Manchester #ENGvIND pic.twitter.com/OsEXhghmV6
— BCCI (@BCCI) July 27, 2025
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பந்திற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து அரை சதம் அடித்தார் பந்த். மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் பந்திற்கு காயம் ஏற்பட, துருவ் ஜுரல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் ரிஷப் பந்திற்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துருவ் ஜுரல் அணியில் இருந்தாலும் கூடுதல் விக்கெட் கீப்பராக ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பும்ரா விளையாடுவது சந்தேகம்
இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பே பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பும்ரா மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளார். எனவே ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் அவர் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டியில் அதிக ஓவர்கள் வீசி உள்ள அவரால் அடுத்த மூன்று நாட்கள் இடைவெளியில் ஐந்தாவது டெஸ்டில் விளையாட முடியுமா என்பது கேள்விகளை எழுப்பி உள்ளது. பும்ரா விளையாடுவது குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் பிட்டாக உள்ளனர். பும்ரா விளையாடுவது குறித்து கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
ரிஷப் பந்த் மற்றும் பும்ரா விளையாடாமல் போனால் கடைசி டெஸ்டில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜூரில் களமிறங்குவார். மேலும் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் ஆகாஷ் தீப் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஓவல் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறிது சாதகமாக இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ் கூடுதல் பந்து வீச்சாளராக அணியில் சேர்க்கப்படலாம். பும்ரா விளையாடும் பட்சத்தில் சிராஜிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஆகாஷ் தீப் இடம் பெற வாய்ப்புள்ளது.