இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 31ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி, தொடரை வெல்ல அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. 4வது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் 5வது போட்டிக்கான அணியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, 31 வயதான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜேமி ஓவர்டனை மீண்டும் அணியில் சேர்த்துள்ளனர்.
We’ve made one addition to our squad for the 5th Rothesay Test, which starts at the Kia Oval on Thursday.
See the squad
— England Cricket (@englandcricket) July 28, 2025
ஜேமி ஓவர்டனின் திடீர் வருகை
ஜேமி ஓவர்டன், கடைசியாக 2022ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில், பேட்டிங்கில் 97 ரன்கள் குவித்து, சதத்தை நூலிழையில் தவறவிட்டார். மேலும் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஷோயிப் பஷீருக்கு, மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவர் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 4வது லியாம் டாசன் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது ஜேமி ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நான்காவது டெஸ்டில் விளையாடிய மற்ற வீரர்கள் அனைவரும் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணியின் திட்டம்?
இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், கிறிஸ் வோக்ஸ் போன்ற மூத்த வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து பந்துவீசி வருகின்றனர். இதனால், அவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவைப்படுவதால், ஜேமி ஓவர்டனின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. அவர், தனது அசுர வேகப்பந்து வீச்சின் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களுக்குச் சவால் அளிப்பதுடன், பேட்டிங்கிலும் அணிக்கு பலம் சேர்ப்பார் என இங்கிலாந்து அணி நம்புகிறது.
தொடரை சமன் செய்யுமா இந்தியா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிபோட்டி, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில், ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை 2-2 என சமன் செய்ய முடியும். அதே சமயம், இங்கிலாந்து அணி இந்த போட்டியை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும். இதனால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.