புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவமழை இதுவரை இயல்பை விட 7 சதவீதம் அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இயல்பான அளவான 418.9 மி.மீ.யை விட அதிகமாக 447.8 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
அதேநேரம் இது பல்வேறு பிராந்தியங்களுக்கு இடையே மிகப்பெரிய மாறுபாடுகளை கொண்டுள்ளது. ராஜஸ்தான், லடாக், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் மிக அதிக மழை பெற்றுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் 384.7 மி.மீ. (இயல்பான அளவு 200.4 மி.மீ.) மழை பெய்திருக்கிறது. இதைப்போல லடாக் 30 மி.மீ. மழை (10.7 மி.மீ.) பெற்றிருக்கிறது.
மேலும் மத்திய பிரதேசம், குஜராத், தாத்ரா-நாகர் ஹவேலி, டையூ-டாமன், ஜார்கண்ட் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 20 முதல் 59 சதவீதம் வரை அதிக மழை பெற்றுள்ளன.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இயல்பான மழை அளவை 19 சதவீத சராசரியில் பெற்றிருக்கின்றன. அதேநேரம் அருணாசல பிரதேசம், அசாம், பீகார், டெல்லி, மராட்டியம், லட்சத்தீவுகள் போன்றவை 20 முதல் 59 சதவீதம் வரை குறைவான மழைப்பொழிவை பெற்று இருக்கின்றன. இந்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.