திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
பாப்பாகுடியில் ரஸ்தா எந்த இடத்தில் 17 வயது சிறுவன் ஒருவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார்.
அப்போது அங்கு ஆத்திரத்தில் இருந்த 17 வயது சிறுவன் உதவி ஆய்வாளர் முருகனை அரிவாளால் தாக்க முயற்சித்து உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத உதவி ஆய்வாளர் வீட்டுக்குள் இருந்த கழிவறைக்குள் சென்று கதவை மூடிவிட்டு ஒளிந்து கொண்டார். ஆனாலும் அச்சிறுவன் ஆத்திரத்தில் அரிவாளால் கழிவறையின் கதவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழிவறையின் கதவு வெட்டுப்பட்டு துண்டானது. இதனால் நிலைகுலைந்த உதவி காவல் ஆய்வாளர் ஒரு கட்டத்தில் தற்காப்புக்காக தன்னிடமிருந்த துப்பாக்கியால் சிறுவனை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் சிறுவனின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அச்சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், சீருடையில் இருக்கும் அதிகாரி ஒருவரிடம் அத்துமீறியதாகவும் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து பெண்களை அவதூறாகப் பேசி தாக்குதல் நடத்தியதாகவும் 11 பிரிவுகளில் அச்சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பாப்பாக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இதை அடுத்து அங்கு போலீஸார் விக்கப்பட்டுள்ளனர்.