Royal Challengers Bengaluru: ஐபிஎல் தொடர் என்றாலே சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கே அதிக ரசிகர்கள் இருப்பார்கள் எனலாம். ஏனென்றால் இதுவரை நடந்த 18 சீசன்களில் இந்த இரண்டு அணிகள் மட்டும் தலா 5 முறை என மொத்தம் 10 சீசன்களின் சாம்பியன்களாக இருந்துள்ளனர். அதிலும் சிஎஸ்கே அணி 12 முறை பிளே ஆப் சுற்றுக்கும், 10 முறை இறுதிச்சுற்றுக்கும் தகுதிபெற்றிருக்கிறது.
RCB: விராட் கோலி முக்கிய காரணம்
ஆனால், தற்போதைய சூழலில் சிஎஸ்கே, மும்பை அணிகளை விட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருதான் அதிக மதிப்பு வாய்ந்த அணியாக திகழ்கிறது. இன்ஸ்டாகிராமில் கூட ஆர்சிபி பக்கத்தைதான் அதிகமானோர் (2.16 கோடி பேர்) பின்தொடர்கின்றனர். ஆர்சிபி அணி இந்த சீசனில்தான் முதல்முறையாக கோப்பையையும் வென்றிருக்கிறது. அப்படியிருக்க, தற்போதைய சூழலில் ஆர்சிபி அணி அனைத்து மட்டத்திலும் நம்பர் 1 அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணம், விராட் கோலி (Virat Kohli) என்று சொன்னால் அது மிகை ஆகாது.
RCB: 2019இல் விராட் கோலியை நீக்க பிளான்
2008ஆம் ஆண்டில் இருந்து ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். 18 ஆண்டுகள் அந்த அணிக்காக தனது முழு திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறார். 2021-2023 வரை கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். ஆர்சிபிக்கு இத்தனை வெறித்தனமான ரசிகர்கள் இருக்க முக்கிய காரணம் விராட் கோலிதான். அப்படியிருக்க, அவர் இந்திய அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் அதாவது 2019ஆம் ஆண்டிலேயே, விராட் கோலியை கேப்டன்ஸியில் இருந்து நீக்க ஆர்சிபி அணி திட்டமிட்டதாக தற்போது ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
RCB: பார்த்தீவ் பட்டேலுக்கு கேப்டன்ஸியா…?
அதுவும் விராட் கோலியை கேப்டன்ஸியில் இருந்து நீக்கிவிட்டு பார்த்தீவ் பட்டேலை கேப்டனாக நியமிக்க அப்போதைய ஆர்சிபி அணி தலைமை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்தார். Sports Tak ஊடகம் உடனான நேர்காணலில் இங்கிலாந்து வீரரும், ஆர்சிபி அணி முன்னாள் வீரருமான மொயின் அலி இதுகுறித்து பேசியபோது, “பார்த்தீவ் பட்டேலை தான் ஆர்சிபி கேப்டனாக்க நினைத்தது” என்றார்.
RCB: மொயின் அலி சொன்ன ரகசியம்
மேலும் அவர், “கேரி கிறிஸ்டன் இருந்த கடைசி ஆண்டில் – முதல் ஆண்டுக்கு பின் – பார்த்தீவ் கேப்டனாகும் நிலையில் இருந்தார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு ஒரு அற்புதமான கிரிக்கெட் நுண்ணறிவு இருந்தது. அப்போது அதுதான் பேச்சாக இருந்தது. ஆனால், அது ஏன் நடக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டது” என்றார். 2018 – 2020 ஆகிய மூன்று சீசன்களில் ஆர்சிபியில் பார்த்தீவ் பட்டேல் விளையாடினார். 2020ஆம் ஆண்டில் அவரை ஆர்சிபி அணி விடுவித்தது. மொயின் அலி 2018, 2019, 2020 ஆகிய மூன்று சீசன்களில் ஆர்சிபி அணியோடு விளையாடினார்.
RCB: விராட் கோலியும் கேப்டன்ஸியும்
2022 சீசனில் விராட் கோலி ஆர்சிபி கேப்டன்ஸியை துறந்தார். 2022இல் பாப் டூ பிளெசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2022, 2023, 2024 ஆகிய சீசன்களுக்கு பிறகு பாப் டூ பிளெசிஸை ஆர்சிபி விடுவித்தது. 2025இல் ரஜத் பட்டிதாரை கேப்டனாக்கியதன் மூலம் சாம்பியன்ஷிப்பையும் ஆர்சிபி வென்றது. விராட் கோலியின் கேப்டன்ஸியில் 2016இல் இறுதிப்போட்டி வரை வந்த ஆர்சிபி 2017இல் 8வது இடத்திலும், 2018இல் 6வது இடத்திலும், 2019இல் மீண்டும் கடைசி இடத்திலும் நிறைவு செய்தது. இதனால், கேரி கிறிஸ்டன் 2020 சீசனில் விராட் கோலிக்கு பதில் கேப்டன்ஸியை பார்த்தீவ் பட்டேலிடம் ஒப்படைக்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அது நடக்கவில்லை. 2020இல் எலிமினேட்டரில் எஸ்ஆர்ஹெச் அணியிடம் தோற்று விராட் கோலி தலைமையில் ஆர்சிபி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | CSK: சாம் கரனை விடுவித்து.. இந்த 3 பவுலருக்கு குறிவைக்கும் சிஎஸ்கே!
மேலும் படிக்க | SRH அணியின் முக்கிய ஆல்ரவுண்டரை தட்டி தூக்கும் சிஎஸ்கே? டிரேட் மூலம் வாய்ப்பு!
மேலும் படிக்க | இந்த 3 வீரர்கள் நீக்கப்படுவது உறுதி! ஏலத்தில் எடுக்கப்படுவதும் சந்தேகம் தான்!