புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவே இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை யில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நேற்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கியதும் பல நாடுகளின் பிரதிநிதிகள் எங்களை தொடர்புகொண்டு பேசினர். அப்போது, நிலைமை எவ்வளவு தீவிரமானது, சண்டை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பன உள்ளிட்ட தகவலை அவர்கள் கேட்டறிந்தனர்.
மேலும் சமரசம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், மூன்றாம் தரப்பின் எந்தவித சமரசத்துக்கும் இடம் இல்லை என அனைத்து நாடுகளிடமும் நாங்கள் திட்டவட்டமாக தெரிவித்தோம்.
‘‘இந்தியா, பாகிஸ்தான் இடையிலான எந்த ஒரு பிரச்சினைக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காணப்படும். பாகிஸ்தானின் தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுத்து வருகிறோம். சண்டை நிறுத்தப்பட வேண்டுமானால், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநரகம் (டிஜிஎம்ஓ) மூலம் மட்டுமே பாகிஸ்தான் கோரிக்கை வைக்க வேண்டும்’’ என உலக நாடுகளிடம் தெரிவித்தோம். அத்தகைய கோரிக்கை வந்த பிறகுதான் போர் நிறுத்தப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவால்தான் பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இதில் உண்மை இல்லை. பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஜூன் 16-ம் தேதி வரையில் பிரதமர் மோடியும் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவே இல்லை.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் மிகவும் தனித்துவமானது. உலகில் எந்த ஒரு நாடும், தங்கள் நதி நீரின் பெரும் பகுதியை பக்கத்து நாட்டுக்கு வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்துகொண்டதாக வரலாறு இல்லை.
ஆனால், நம் நாட்டு நதி நீரின் பெரும்பகுதியை பாகிஸ்தானுக்கு வழங்கும் வகையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த வரலாற்றை காங்கிரஸார் மறைக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.