புலவோயா,
ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே, நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கிரேக் எர்வின் 39 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மேட்ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்துள்ளது. வில் யங் (41 ரன்), டிவான் கான்வே (51 ரன்) ஆகியோர் அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.