மும்பை,
நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோத்யாஸ், பாட்னா பைரட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கும் 12-வது புரோ கபடி லீக் போட்டிக்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. முதல் கட்ட லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டி விசாசப்பட்டினத்தில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 2-வது கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 12-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், 3-வது கட்ட ஆட்டங்கள் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரையும், 4-வது மற்றும் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் அக்டோபர் 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையும் நடக்கிறது. பிளே-ஆப் சுற்று போட்டி விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் வருகிற 29-ந் தேதி நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்- தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. அதே நாளில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்-புனேரி பால்டன் அணிகள் சந்திக்கின்றன.
கடந்த ஆண்டு சென்னையில் புரோ கபடி நடக்கவில்லை. தற்போது மறுபடியும் சென்னைக்கு கபடி திருப்புவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.