புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் வறண்ட பாலைவனத்தில் சிந்துசமவெளி தொடர்பான நாகரிகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆழமான பாலைவன பகுதியில் ஹரப்பா காலத்தின் தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. இந்தகண்டுபிடிப்பு, பண்டைய சிந்து சமவெளி நாகரிக எல்லைகளை மறுவடிவமைக்கும் முக்கிய தடயங்களை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
இது, ராஜஸ்தானின் ஆழமான பாலைவனத்திலும் சிந்து சமவெளியைப் போன்ற நாகரிக அடையாளம் இருப்பதற்கான முதல் சான்றாகும், மேலும் வடக்கு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் நடுவே உள்ள ஹரப்பா தளங்களுக்கு இடையேயான ஒரு முக்கிய இணைப்பாகவும் இது கருதப்படுகிறது. ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ராட்டாடி ரிதேரியில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது.
ராம்கர் தாலுகாவிலிருந்து கிட்டத்தட்ட 60 கிமீ தொலைவிலும் பாகிஸ்தானின் சந்தனவாலாவிலிருந்து சுமார் 70 கிமீ தொலைவிலும் உள்ள இது தொலைதூர பாலைவனமாகும். அங்கு ஹரப்பா காலத்திய எச்சங்களும் அதன் அடையாளமான சில தொல்பொருட்களும் காணப்பட்டுள்ளன.
இந்த இடம் பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பங்கஜ் ஜகானி தலைமையில் தோண்டப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகளை ராஜஸ்தான் பல்கலைக்கழகம் மற்றும் உதய்பூரில் உள்ள ராஜஸ்தான் வித்யாபீடம் ஆகியவற்றின் நிபுணர்கள் சரிபார்த்துள்ளனர்.
இப்பகுதியில் கிடைத்துள்ளவற்றில் பாரம்பரிய ஹரப்பா கலாச்சாரப் பொருட்களாக, சிவப்புப் பாத்திர மட்பாண்டங்கள், துளையிடப்பட்ட ஜாடிகள், டெரகோட்டா கேக்குகள், செர்ட் கத்திகள், களிமண் மற்றும் ஓடுகளாலான வளையல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதன் மையத்தில் நெடுவரிசை, ஆப்பு வடிவ செங்கற்கள் மற்றும் ஹரப்பா கட்டிடக்கலை வடிவங்களுடன் ஒத்துப்போகும் அடித் தளங்களைக் கொண்ட ஒரு சூளையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள், வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வாளர்களான முனைவர்.கார்க்வால் மற்றும் ஜகானி ஆகியோரால் எழுதப்பட்ட ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
இது, சர்வதேச சகமதிப்பாய்வு செய்யப்பட்ட தொல்பொருள் ஆய்வு இதழ் ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது வெளியீட்டிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால், ராஜஸ்தானின் இந்த பாலைவனத் தளம் ஹரப்பா ஆய்வுகளில் ஒரு முக்கிய இடமாக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், உலகின் ஆரம்பகால நகர்ப்புற நாகரிகங்களில் விரிவடைந்து வரும் வரைபடத் தடத்தில் ராஜஸ் தானும் இணையும். சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு அதன் கிராமப்புற-நகர்ப்புற இயக்கவியல், சுற்றுச்சூழல் தழுவல் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையேயான இணைப்பைப் பார்ப்பதற்கு ஒரு புதிய பார்வையையும் இக்கண்டுபிடிப்பு வழங்குகிறது.
இது குறித்து ராஜஸ்தான் வித்யாபீடத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜீவன் சிங் கார்க்வால் கூறுகையில், ‘இது ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க கிராமப்புற ஹரப்பா தளம். இது கிமு 2600 மற்றும் 1900- க்கு இடைப்பட்டதாக இருக்கலாம். இதன் இருப்பிடம் மற்றும் பண்புகள், வடக்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத் இடையே ஒரு முக்கியமான தொல்பொருள் இடைவெளியைக் குறைக்கின்றன” என்றார்.
இது குறித்து ராஜஸ்தானின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையைச் சேர்ந்த மூத்த வரலாற்றாசிரியர் தமேக் பன்வார், ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு இது. இந்த தளம் ஹரப்பா கிராமப்புற குடியிருப்புகளின் தடயங்கள், வர்த்தகம் மற்றும் வள ஒருங்கிணைப்பு மூலம் நகர்ப்புற மையங்களை இணைப்பதில் அவற்றின் பங்கையும் பிரதிபலிக்கிறது.
சிந்து மற்றும் ரோஹ்ரி பிளேடு துண்டுகளிலிருந்து பெறப்பட்ட ஒரு நுண்ணிய கல், கருங்கல்லால் செய்யப்பட்ட கருவிகள் உள்ளிட்ட இந்த கண்டுபிடிப்பு, நாகரிகத்தின் பரந்த புவியியல் முழுவதும் நீண்ட தூர பரிமாற்றம் மற்றும் வள திரட்டலுக்கு மேலும் ஒரு சான்றாகும்.’ என கூறினார்.