6 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

வாஷிங்டன்,

அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரான் தனது சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட மத்திய கிழக்கில் தொடர்ந்து மோதலை தூண்டி வருகிறது. எனவே, பிற நாடுகளில் பயங்கரவாதத்தை வளர்க்கவும், சொந்த மக்களை நசுக்கவும் ஈரானுக்கு வருவாய் கிடைப்பதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது, ஈரானை சேர்ந்த பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை கொள்முதல் செய்தல் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபடும் 20 சர்வதேச நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்கள், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவை.

இந்தியாவை சேர்ந்த காஞ்சன் பாலிமர்ஸ், ஆல்கெமிக்கல் சொல்யூசன்ஸ், ராம்னிக்லால் எஸ்.கொசாலியா அன் கோ, ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல் லிமிடெட், பெர்சிஸ்டன்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் ஆகிய 6 நிறுவனங்கள் பொருளாதார தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களில் அடங்கும்.

அமெரிக்காவில் உள்ள அந்நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஈரான், அமைதிக்கு ஒப்புக்கொள்ளும்வரை, அணுஆயுத திட்டத்தை கைவிடும்வரை ஈரான் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் உயர் தலைவருடன் தொடர்புடைய 50-க்கு மேற்பட்ட தனிநபர்கள் மீது அமெரிக்க நிதித்துறை பொருளாதார தடை விதித்துள்ளது.

இதற்கிடையே, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பாதி வேலைப்பாடு முடிந்த தாமிரம் மற்றும் தாமிர பொருட்கள் மீது 50 சதவீத வரியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல், இது அமலுக்கு வருகிறது. இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதால் ஆகஸ்ட் 1 (இன்று) முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்த்நிலையில், தற்போது இந்திய நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.