'கற்பழிப்பில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே இருங்கள்..' – குஜராத் போலீசார் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

ஆமதாபாத்,

குஜராத்தின் ஆமதாபாத் போலீசார் சார்பில் நகரின் பல இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில் பெண்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் சில வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அதாவது, ‘நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்லாதீர்கள், நீங்கள் கற்பழிக்கவோ, கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகவோ நேரிடும். உங்கள் நண்பர்களுடன் இருட்டான இடங்களுக்கு செல்ல வேண்டாம், கற்பழிக்கப்படவோ, கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகவோ நேரிடலாம்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

நகரின் பல இடங்களிலும், சாலைகளின் மையப்பகுதிகளில் உள்ள தடுப்புச்சுவர்களிலும் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்கள் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தின. இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. எனவே அந்த போஸ்டர்கள் உடனடியாக கிழிக்கப்பட்டன.

எனினும் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக விமர்சித்தன. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை இந்த போஸ்டர்கள் அம்பலப்படுத்தி இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி இருந்தது.

போலீசார் அளித்த விளக்கம் என்ன..?

இந்த போஸ்டர்கள் மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அது குறித்து ஆமதாபாத் போலீசார் விளக்கம் அளித்தனர்.

இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் நீதா தேசாய் கூறுகையில், ‘அந்த போஸ்டர்கள் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது சாலை பாதுகாப்புக்கானதே தவிர, பெண்களின் பாதுகாப்புக்கானது அல்ல. எனினும் அதில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் போலீசாருக்கு தெரியாது’ என தெரிவித்தார்.

மேலும் அவர், ‘பள்ளி, கல்லூரிகளில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புவதாகவும், அதில் எங்கள் போலீசாரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். போக்குவரத்து விழிப்புணர்வு சார்ந்த வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் மட்டுமே எங்களிடம் காட்டினர். ஆனால் இந்த சர்ச்சைக்குரிய போஸ்டர்களை எங்களிடம் காட்டாமலேயே ஒட்டி இருக்கிறார்கள்’ என்றும் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.