Anderson Tendulkar Trophy: இங்கிலாந்தில் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் இறுதியாக 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
Anderson Tendulkar Trophy: தொடரில் நடந்தது என்ன?
லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்ட்ன் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஜடேஜா கடுமையாக வெற்றிக்கு போராடி வந்தாலும் துரதிருஷ்டவசமாக கடைசி பேட்டர் சிராஜ் போல்டாக, 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடி டிரா செய்தது.
Anderson Tendulkar Trophy: ஆருடங்களை பொய்யாக்கிய இந்தியா
தொடர்ந்து, 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூலை 31ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவடைந்தது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. சுப்மான் கில் தலைமையிலான இளம் இந்திய அணி தொடரை சமன் செய்ததே பெரிய வெற்றி எனலாம். சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்துதான் தொடரை வெல்லும் என பலரும் ஆருடம் சொல்லி வந்த நிலையில், அதனை இந்திய அணி பொய்யாக்கி உள்ளது.
Anderson Tendulkar Trophy: தொடரில் அதிக ரன்கள் – சுப்மான் கில்
ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை 2025 தொடரில் அதிக ரன்களை இந்திய அணி கேப்டன் சுப்மான் கில் அடித்துள்ளார். அவர் 10 இன்னிங்ஸில் 754 ரன்களை அடித்துள்ளார். இதில் 4 சதங்கள், 85 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடக்கம். தொடரில் அதிக சதங்கள் அடித்தவரும் இவர்தான். ஐபிஎல் தொடரில் இருந்தே வலைப் பயிற்சியின்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக Dukes பந்தில் சுப்மான் கில் தயாராகி வந்தார், அது இந்த தொடரில் அவருக்கு பலனை தந்துள்ளது எனலாம்.
Anderson Tendulkar Trophy: தொடரில் அதிக விக்கெட்டுகள் – சிராஜ்
மறுமுனையில் ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை 2025 தொடரில் அதிக விக்கெட்டுகளை முகமது சிராஜ் கைப்பற்றி உள்ளார். அவர் 5 போட்டிகளில் மொத்தம் 185.3 ஓவர்களை வீசி 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் இரண்டு முறை 5-விக்கெட் haul மற்றும் ஒரு முறை 4-விக்கெட் haul அடக்கம். நடப்பு தொடரில் இந்தியா – இங்கிலாந்து இரு அணிகளையும் சேர்ந்தாலும் அதிக ஓவர்களை சிராஜ்தான் வீசியருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Anderson Tendulkar Trophy: ஏன் கோப்பை பகிரப்பட்டது?
இது ஒருபுறம் இருக்க, இங்கிலாந்து – இந்தியா இடையேயான இந்த டெஸ்ட் தொடர் இந்தாண்டில் இருந்துதான் ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் என்றழைக்கப்படுகிறது. இதற்கு முன்னர் வரை, பட்டோடி கோப்பை என்றே அழைக்கப்பட்டு வந்தது. கடைசியாக 2021ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த பட்டோடி கோப்பையும் டிராவானது. மேலும், 2018இல் இங்கிலாந்தில் நடந்த தொடரும் இங்கிலாந்து அணியால் கைப்பற்றப்பட்டது.
வழக்கமாக, ஒரு டெஸ்ட் தொடர் டிரா செய்யப்பட்டால் அதற்கு முன் கோப்பையை வென்ற அணிதான் அந்த கோப்பையை தக்கவைக்கும். பட்டோடி கோப்பையை பொருத்தவரை இங்கிலாந்து அணிதான் கடைசியாக கோப்பையை பெற்றிருந்தது, ஆனால் தற்போது இந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை பெயர் மாற்றம் பெற்றிருப்பதால் இது புதிய பதிப்பாகவே கருதப்படும். எனவேதான், ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் இங்கிலாந்து – இந்தியா இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும் படிக்க | இங்கிலாந்தை கதறவிட்ட சிராஜ்… இந்தியா திரில் வெற்றி – பட்டையை கிளப்பிய கில் படை!
மேலும் படிக்க | எம்பி-யுடன் திருமணம்! இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் நீக்கம்!
மேலும் படிக்க | Chahal hurt by Rohit Wife: ரோகித் சர்மா மனைவி செய்த இந்த காரியம்.. சாஹல் வருத்தம்!