தொடரை சமன் செய்த இந்தியா.. பாராட்டிய விராட் கோலி… சிராஜ் நெகிழ்ச்சி பதில்

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்‘ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதன் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் (111ரன்கள்), ஜோ ரூட் (105 ரன்கள்) சதமடித்தனர் இந்தியா தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

இந்த போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகள் (முதல் இன்னிங்சில் 4, 2-வது இன்னிங்சில் 4) வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முன்னிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.

இந்த போட்டி மட்டுமல்லாது இந்த தொடர் முழுவதும் அற்புதமாக செயல்பட்ட முகமது சிராஜ் மொத்தம் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற பும்ராவின் சாதனையை சமன் செய்தார். இதனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் முமகது சிராஜை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய நட்சத்திர வீரருமான விராட் கோலி வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விராட் கோலி, “இந்திய அணியின் அபார வெற்றி. சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் தொடர் முயற்சியும், அர்ப்பணிப்பும்தான் இந்த அற்புதமான வெற்றியை நமக்கு கொடுத்துள்ளது. அணிக்காக எல்லாவற்றையும் கொடுக்கும் முகமது சிராஜுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். அவரை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பதிவிட்டார்.

அதற்கு பதிலளித்த முகமது சிராஜ், “என்னை “நம்பியதற்கு” நன்றி பையா” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார்.

முகமது சிராஜ் அறிமுகம் ஆன ஆரம்ப காலங்களில் தடுமாற்றமான செயல்பட்டார். இதன் காரணமாக ரசிகர்கள் அவரை கிண்டலடித்தனர். அந்த சமயங்களில் விராட் கோலி அவருக்கு ஆதரவாக நின்று சிராஜ் வளர்வதில் முக்கிய பங்கு வகித்தார். அதன் காரணமாக தற்போது இந்திய அணியின் முன்னணி பவுலராக சிராஜ் வளர்ந்துள்ளார். அதனை நினைத்தே சிராஜ், விராட் கோலிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது பலரது மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.