சென்னை,
இஸ்ரோ சார்பில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மே மாதம் 18-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் இ.ஓ.எஸ்.-09 செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஆனால், திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்த முடியாமல் இது தோல்வியில் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தோல்விக்கான காரணம் குறித்து பகுப்பாய்வுக்குழு அமைக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே தோல்விக்கான காரணத்தை இந்த குழு ஆய்வு செய்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில், ‘பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்ததற்கு காரணமான சிக்கலை தோல்வி பகுப்பாய்வுக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது, அதற்கான பகுப்பாய்வு முடிந்துவிட்டது. குழுவின் அறிக்கை விரைவில் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த பிரச்சினை சிறியது என்றாலும், அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே விவரங்களை முழுமையாக வெளியிட முடியும்’ என்று கூறினார்.