சென்னை,
3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் இன்று (புதன்கிழமை) முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது.
‘கிளாசிக்கல்’ பாணியில் நடைபெறும் இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக அரங்கேறுகிறது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கிராண்ட்மாஸ்டர்களான இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, கார்த்திகேயன் முரளி, கடந்த ஆண்டு சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியனான பிரணவ் (இருவரும் தமிழ்நாடு), நிஹால் சரின், அவோன்டர் லியாங் (அமெரிக்கா), ராய் ராப்சன் (அமெரிக்கா), அனிஷ் கிரி (நெதர்லாந்து), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), ஜோர்டென் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
‘ரவுண்ட் ராபின் லீக்’ முறையில் இந்த போட்டி 9 சுற்றுகள் கொண்டதாக நடத்தப்படுகிறது. இதன் முடிவில் முதலிடத்தை பிடிப்பவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.
இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1 கோடியாகும். மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்பவருக்கு ரூ.25 லட்சமும், 2-வது இடம் பெறுபவருக்கு ரூ.15 லட்சமும், 3-வது இடத்தை பெறுபவருக்கு ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும். கடைசி இடத்துக்கு தள்ளப்படுபவருக்கு ரூ.1.80 லட்சம் கிடைக்கும்.