மும்பை,
அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. அதில் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அந்த அணியிலிருந்து விலக முடிவெடுத்ததாக கூறப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது. இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக சஞ்சு சாம்சன் தவறவிட்டார். சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.
முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் – சஞ்சு சாம்சன் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இதனால் அவர் அடுத்த சீசனுக்கு (2026) முன்னதாக ராஜஸ்தான் அணியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்ய கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணி அதிக ஆர்வம் காட்டுவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது, “சஞ்சு சாம்சானை தேர்வு செய்யும் அணிகளில் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது சி.எஸ்.கே அல்ல. கே.கே.ஆர் அணிதான் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
ஏனெனில் கே.கே.ஆர் அணியிடம் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் கிடையாது. அது அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாவதாக, ஒரு கேப்டனை தேர்வு செய்தால் என்ன தவறு? அஜிங்க்யா ரஹானே சிறப்பாக கேப்டனாக இருந்து ரன்கள் குவித்துள்ளார் என்பதை நான் மறுக்கவில்லை. அஜிங்க்யா ரஹானே ஒரு பேட்ஸ்மேனாக – அவர் தொடக்க வீரராக களமிறங்குகிறார், இல்லையெனில் பேட்டிங் வரிசை கொஞ்சம் சிக்கலாக உள்ளது.
மேலும் அவர்களிடம் ஒரு வீரரையும் விடுவிக்க முடியும். அவர்கள் விரும்பினால், வெங்கடேஷ் ஐயரை விடுவித்து, கிட்டத்தட்ட ரூ. 24 கோடியை பெற முடியும், அதனை வைத்து அவர்களால் உண்மையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனால் அவர்கள் சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.