பெங்களூருவில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதையிலும், சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதையிலும் 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பசுமை நிறப்பாதையில் உள்ள ஆர்.வி.ரோடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் நிறைவடைந்தது. இது டிரைவர் இல்லா மெட்ரோ ரெயில் பாதை ஆகும். இந்த மஞ்சள் நிறப்பாதையில் 10-ந்தேதி (நாளை) மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரு வருகிறார். அவர் மஞ்சள் நிறப்பாதையில் அவர் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி நாளை தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து நேராக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வரும் அவர், பெங்களூரு-பெலகாவி இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக மஞ்சள் நிறப்பாதையில் உள்ள ராகிகுட்டா மெட்ரோ ரெயில் சேவையை பச்சை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
அதன் பிறகு அவர் ஜே.பி.நகர் 4-வது பிளாக்கில் இருந்து கடபுகெரே வரையிலான 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பகல் 3 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
அவர் பயணிக்கும் மார்க்கத்தில் சாலைகளுக்கு தார் போடப்பட்டு பளபளவென்று மின்னுகின்றன. பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.