கடந்த ஒரு மாத காலமாக சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் விளையாட உள்ளார் என்ற செய்தி தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவின் முக்கிய புள்ளிகளை சந்தித்து பேசியதாக புகைப்படங்கள் வெளியானது. இதனால் ரசிகர்கள் பலரும் ஐபிஎல் 2026ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட உள்ளார் என்ற கற்பனையில் ஈடுபட தொடங்கினர். இருப்பினும் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் எப்படி சென்னை அணிக்கு வருவார் என்ற கேள்வியும் பலருக்கும் இருந்தது. சென்னை அணி சஞ்சு சம்சனை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் ஐபிஎல் 2025ல் சென்னை அணி மிகவும் படு தோல்வி அடைந்திருந்தது.
மேலும் படிங்க: பெங்களூருவில் புதிய கிரிக்கெட் மைதானம்.. சின்னசாமி ஸ்டேடியத்திற்கு குட்-பை.. கர்நாடக அரசு அதிரடி!
பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சிஎஸ்கே
சென்னை அணிக்கு ஐபிஎல் 2025 ஒரு மோசமான ஆண்டாக அமைந்திருந்தது. ஆரம்பத்தில் சில போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்தனர். இதற்கிடையில் கேப்டன் ருதுராஜ் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதன் காரணமாக மீண்டும் தோனி கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் சூழல் ஏற்பட்டது. இருப்பினும் அணியை சரிவில் இருந்து அவரால் மீட்டெடுக்க முடியவில்லை. சென்னை அணியில் இருந்த சில வீரர்கள் சரியாக விளையாடாமல் போனதும் இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனை தொடர்ந்து பாதி சீசனில் இருந்து அணியை மீண்டும் வலுப்படுத்த தொடங்கினர்.
ட்ரேடு மூலம் வாங்க திட்டம்
சென்னை அணி சஞ்சு சாம்சன் மீது விருப்பம் தெரிவித்தது போல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சிஎஸ்கே அணியில் உள்ள இரண்டு வீரர்களின் மீது விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள அஸ்வின்/ஜடேஜா மற்றும் சிவம் துபேவை சஞ்சு சாம்சனுக்கு பதிலாக டிரேடு மூலம் மாற்ற ராஜஸ்தான் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முதலில் சென்னை அணி இதற்கு சம்மதம் தெரிவித்தது என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இதனை சிஎஸ்கே நிர்வாகம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சஞ்சு சாம்சனை பணத்தின் மூலம் மட்டுமே வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் சென்னையில் உள்ள எந்த ஒரு வீரரையும் டிரேடு மூலம் மாற்ற சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதே சமயம் சஞ்சு சாம்சன் நேரடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்திடம் தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை சஞ்சு சாம்சனை டிரேடு மூலம் வாங்க முடியவில்லை என்றால், மினி ஏலத்தில் எப்படியாவது எடுக்க வேண்டும் என்று திட்டம் வைத்துள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ். இவர்களை போலவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சஞ்சு சாம்சனை வாங்க திட்டமிட்டு வருகிறது. இதனால் மினி ஏலத்தில் அவருக்கு பெரிய ஜாக்பாட் அடிக்க உள்ளது.
அஸ்வின் வெளியுற வாய்ப்பு
கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். இருப்பினும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அவரால் கை கொடுக்க முடியவில்லை. சென்னை அணியில் அஸ்வின் இணைந்த போது எவ்வளவு வரவேற்பு இருந்ததோ அதைவிட அதிகமாக அவர் மீது ரசிகர்கள் கோபத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறு அஸ்வின் சென்னை அணி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அஸ்வின் வெளியேறும் பட்சத்தில் சென்னை அணிக்கு 9.75 கோடி மிச்சமாகும். இதன் மூலம் வேறு சில நல்ல வீரர்களை மினி ஏலத்தில் எடுக்க முடியும். இருப்பினும் இவை அனைத்தும் வதந்திகளாகவே உள்ளதால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்தால் தான் ரசிகர்களுக்கு ஒரு தெளிவான தகவல்கள் கிடைக்கும்.
மேலும் படிங்க: இந்த 3 வீரர்களுக்கு இனி டெஸ்ட் அணியில் வாய்ப்பு இல்லை! பிசிசிஐ அதிரடி!