மேலும் 476 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 476 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அக்கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29-ஏ-ன்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் (தேசிய / மாநில / பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத) பதிவு செய்துள்ளன. இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அமைப்பும் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட பின், சின்னம், வரி விலக்கு உள்ளிட்ட சில சலுகைகள் மற்றும் பயன்களைப் பெறுகின்றன.

அரசியல் கட்சிகளுக்கான பதிவுகள் தொடர்பான வழிகாட்டுதலின் படி, தொடர்ந்து 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.இதன் ஒரு பகுதியாக விரிவான மற்றும் தொடர் உத்திசார் நடவடிக்கைகள் மூலம் தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கென நாடு தழுவிய ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டு பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கான முதற்கட்டப் பணியில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே 334 பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளை அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து கடந்த ஒன்பதாம் தேதி நீக்கியுள்ளது. இதனையடுத்து இப்பட்டியலில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,854-ல் இருந்து 2,520-ஆக குறைந்துள்ளது. இரண்டாம் சுற்று நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 476 பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எந்தவொரு அரசியல் கட்சியும் பட்டியலில் இருந்து முறையற்ற வகையில் நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்புமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள கட்சிகள் தங்களது தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பு வழங்கப்படும். மாநில தலைமை தேர்தல் அலுவலர்களின் அறிக்கையின் அடிப்படையில் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.