Virat Kohli ODI Retirement: விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கடந்த மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர். இவர்கள் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்ததால், இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார்கள். இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களது ஒருநாள் கிரிக்கெட்டும் முடிவுக்கு வரலாம் என்றும் 2027 நடக்க இருக்கும் ஒருநாள் உலக கோப்பை வரை அவர்கள் நீடிக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
கோலி பதில்
இந்த நிலையில், வதந்திகளுக்கு தனது செயலால் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நட்சத்திர வீரர் விராட் கோலி. அண்மையில் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பயிற்சி மேற்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், பயிற்சிக்கு உதவியதற்கு நன்றி சகோதரரே. உங்களை சந்திப்பதில் எப்போது மகிழ்ச்சி என குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் நயீம் அமினை குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் விராட் கோலி தற்போது தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது.
ரசிகர் பக்க போஸ்ட்டுக்கு லைக்
ஆசிய கோப்பைக்கு பின்னர் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. ஐபிஎல்லுக்கு பின்னர் இதில்தான் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட உள்ளனர். தற்போது இதை நோக்கியே விராட் கோலியின் பயிற்சி செல்வதாக பார்க்கப்படுகிறது. இதனை உறுதிபடுத்தும் விதமாக, விராட் கோலியின் இந்த இன்ஸ்டா ஸ்டோரிக்கு பின்னர், ஒரு ரசிகர் பக்கம், ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்காக தயாராகிறார் விராட் கோலி என பதிவிட்டிருந்தது. இந்த பதிவை விராட் கோலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் லைக் செய்திருந்தது. இந்த செயல் விராட் கோலி ஒருநாள் போட்டியில் நீடிப்பதை காட்டுகிறது. அவர் இந்த ஆண்டுக்குள் ஓய்வை அறிவிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்ட்ய் வருகிறது.
ரோகித், கோலி குறித்து பிசிசிஐ கூறுவது என்ன?
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஒருநாள் ஓய்வு குறித்து பலரும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விஷயத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி இருக்கிறது. அதாவது, ரோகித் மற்றும் கோலியின் எதிர்காலம் குறித்து வாரியம் இப்போதைக்கு கவலைப்படவில்லை என்றும், வர இருக்கும் ஆசிய கோப்பை மற்றும் 2026 டி20 உலகக் கோப்பைக்காக இந்திய அணியை தயார் செய்வதில்தான் முழு கவனமும் செலுத்தி வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
About the Author
R Balaji