புதுடெல்லி: நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேச பிரிவினை நிகழ்ந்த ஆகஸ்ட் 14ம் தேதியை, பிரிவினை துயரத்தின் நினைவு தினமாக நாடு அனுசரித்து வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “நமது வரலாற்றின் அந்த துயரமான அத்தியாயத்தில் எண்ணற்ற மக்கள் அனுபவித்த திடீர் வன்முறையையும் வலியையும் நினைவுகூரும் வகையில், இந்தியா #PartitionHorrorsRemembranceDay ஐ அனுசரிக்கிறது.
அவர்களின் மன உறுதியை போற்றும் நாளாகவும் இது அமைகிறது. கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொள்வதற்கான அவர்களின் திறனும், அத்தகைய ஒரு சூழலிலும் புதிதாகத் தொடங்குவதற்கான அவர்களின் தேடலும் போற்றுதலுக்குரியவை.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி, குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளனர். நமது நாட்டை ஒன்றிணைக்கும் நல்லிணக்கத்தின் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கான நமது நீடித்த பொறுப்பை இந்த நாள் நினைவூட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள செய்தியில், “#PartitionHorrorsRememberanceDay என்பது நாட்டின் பிரிவினையை நினைவுகூர்ந்து அந்த துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு நாள். இந்த நாளில், நாட்டை துண்டு துண்டாகப் பிரித்து, பிரிவினை வன்முறை, சுரண்டல் மற்றும் அட்டூழியங்களுக்கு வழிவகுத்து இந்தியத் தாயை புண்படுத்தியது காங்கிரஸ்.
பிரிவினையால் கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். அவர்கள் அனைவரையும் மரியாதையுடன் நினைவு கூர்கிறேன். பிரிவினையின் இந்த வரலாற்றையும் வலியையும் நாடு ஒருபோதும் மறக்காது. பிரிவினையின் இந்த பயங்கரத்தால் உயிர் இழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள பதிவில், “#PartitionHorrorsRememberanceDay நாளில், புத்தியின்றி நிகழ்ந்த பிரிவினையாலும், அதனால் ஏற்பட்ட கொடூர வன்முறையாலும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கும், இந்தியாவில் உதவியற்ற பிரிவினை அகதிகளாக தங்கள் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த என் பெற்றோர் உள்ளிட்ட அதிசயமாக உயிர் பிழைத்தவர்களுக்கும் நான் அஞ்சலியை செலுத்துகிறேன். பிரிவினையின் கொடூரங்கள் எப்போதும் நினைவில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.