இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. தற்போது ஆசிய கோப்பையை நோக்கிதான் அவர்களது பயணம் உள்ளது. அத்தொடருக்கான இந்திய அணியை தேர்வ்ய் செய்யும் முணைப்பில்தான் பிசிசிஐ உள்ளது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளதால், ஆசிய கோப்பை டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பைக்கு இது ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், இந்திய அணியை பலமாக தேர்வு செய்ய வேண்டும் என டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆலோசித்து வருகின்றனர்.
இத்தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிரடி வீர யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடமில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் கூட அதிரடியை கையாள்பவர் ஜெய்ஸ்வால், நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கூட அவர் 2 சதங்கள் உட்பட 411 ரன்களை குவித்தார். ஆக்ரோஷமான ஆட்டத்தை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஜெய்ஸ்வாலுக்கு ஆசிய கோப்பை தொடரில் அவர் நிச்சயம் தொடக்க வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
2025 ஐபிஎல் தொடரிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். அவர் 14 போட்டிகளில் 559 ரன்களை குவித்தார். ஆனால், இவருக்கு வரும் ஆசிய கோப்பையில் வாய்ப்பு இல்லை என தெரிகிறது. அதாவது, ஜெய்ஸ்வாலை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்த தேர்வாளர்கள் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஆசிய கோப்பையில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
தேர்வாளர்கள் குழு ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜெய்ஸ்வால் மட்டுமல்லாமல் சுப்மன் கில்லுக்கும் அணியில் இடம் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. டி20, ஒருநாள் டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அசத்தும் வீரர்களையே ஒதுக்குவது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு வீரரை ஒரு குறிப்பிட்ட ஃபார்மெட்டில் ஒதுக்குவது என்பது நல்லதல்ல என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வரும் 19ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji