திருப்பூர்: ஆட்டோவில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்த, திருப்பூரில் பணியாற்றும் பெண் காவலர் கோகிலாவுக்கு பாராட்டு குவிகிறது. இந்தச் சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில், சுதந்திரதினத்தை முன்னிட்டு போலீஸார் நேற்று அதிகாலை வரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில், அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் பெண் கதறி அழுவதை பார்த்த போலீஸார், ஆட்டோவின் அருகில் சென்று பார்த்தபோது கர்ப்பிணி பெண் வலியால் அலறுவதை கண்டு அஞ்சினர்.
மேலும், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்துக்காக திருமுருகன்பூண்டி இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு செல்வதும் தெரிந்தது. ஆனால் மருத்துவமனை செல்வதற்குள், குழந்தை பிறந்துவிடும் என்ற இறுதிக்கட்ட நிலையில் கர்ப்பிணி இருப்பதை அறிந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கோகிலா, சமயோசிதமாக உடனடியாக ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.
மருத்துவமனை செல்வதற்குள் அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தையின் தொப்புள்கொடியை அகற்றி, தாய் சேய் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த வட மாநில பெண்ணுக்கு பெண் காவலர் ஒருவர் பிரசவம் பார்த்து தாய் சேய் இருவரையும் காப்பாற்றிய சம்பவத்தை அறிந்த மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் போலீஸார் இடையே இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இதில் பிரசவம் பார்த்த கோகிலா செவிலியராக பணியாற்றிவிட்டு, விருப்பத்தின் பேரில் காவல் துறையை தேர்ந்தெடுத்து பணியாற்றி வருவதை அறிந்த பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இளம் காவலர் கோகிலாவுக்கு தெரிவித்தார்.
இது குறித்து பெண் காவலர் கோகிலா கூறும்போது, “சுதந்திர தினம் என்பதால், மாநகரில் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது எங்கள் பகுதிக்கு வந்த ஆட்டோவில், பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்தார். அவர் வடமாநிலப் பெண் என்பதால் குடும்பத்தினர் யாரும் இங்கு இல்லை. உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் தான் மருத்துவமனைக்கு சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாகவும், தன்னை ஆட்டோவில் வருமாறும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஆட்டோவில் செல்லும்போது, அந்தப் பெண் வலியால் துடித்த நிலையில் பிரசவமானது. நான் ஏற்கெனவே செவிலியர் பயிற்சி முடித்து பணியாற்றிய அனுபவம் எனக்கு இருந்ததால், அவசரத் தேவை ஏற்பட்ட நிலையில் பிரசவத்தை எவ்வித பதட்டமும் இன்றி செய்ய முடிந்தது. மருத்துவமனை வருவதற்குள்ளேயே அந்த பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்கள் மூலம் தொப்புள்கொடி அகற்றி இருவரையும் சிகிச்சைக்கு சேர்த்தோம்.
செவிலியர் பயிற்சி முறைப்படி முடித்து இருந்தாலும், எனக்கு காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் தான் போலீஸாக பணியாற்றி வருகிறேன். அவசரத்துக்கு கற்ற கல்வி கை கொடுத்தது” என்றார். காவலர் கோகிலாவின் சொந்த ஊர் சேலம். தற்போது திருப்பூர் எம்.ஜி.ஆர் நகரில் தங்கி போலீஸாக பணியாற்றி வருகிறார்.