Team India: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் காயம் ஏற்பட்டது. கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப்பாக அடிக்க முயன்றபோது, பந்தை கணிக்க தவறி, பந்து நேரடியாக அவரது வலது காலின் பெரு விரல் பகுதியை காயம் செய்தது. இதனால் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இருப்பினும் அப்போட்டியில் பாதியில் விட்ட தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை ரிஷப் பண்ட் உடைந்த காலுடன் விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால், 2வது இன்னிங்ஸில் விளையாடவில்லை. இதையடுத்து 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக தமிழக விக்கெட் கீப்பர் நாராயண் ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டார். ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக 7 இன்னிங்ஸ்களில் விளையாடினார். அதில், அவர் 479 ரன்களை குவித்தார். 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களும் இதில் அடங்கும்.
பிசிசிஐயின் புதிய விதி
இந்த நிலையில், இந்த சம்பவம் மற்றும் கடந்த காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு, பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) உள்நாட்டுக் கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பாக நாட்கள் நீடிக்கும் போட்டிகளில், ஒரு வீரர் தீவிர காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் இருக்கும்போது அவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கும் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரைக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் தலையில் அடிப்பட்டு கன்கஷன் ஏற்பட்டால் மட்டுமே ஒரு வீரருக்கு பதில் மாற்று வீரர் வந்து விளையாடலாம் என்ற விதி இருக்கிறது. தற்போது இந்த புதிய விதிமுறை மூலம் தமிழ்நாட்டில் நடைபெறும் டொமஸ்டிக் கிரிக்கெட் மற்றும் பிற போட்டிகளில் வீரர்கள் தீவிர காயம் காரணமாக விளையாட முடியாமல் இருந்தால் உடனடியாக மாற்று வீரரை கொண்டு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji