வாஷிங்டன் டி.சி.,
3 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக டிரம்ப் முயற்சிகளை எடுத்து வருகிறார். இதற்காக சமீபத்தில், கலிபோர்னியாவின் ஆங்கரேஜ் பகுதியில் உள்ள ராணுவ கூட்டு படை தளத்தில் புதின் மற்றும் டிரம்ப் இருவரும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், டிரம்பின் முயற்சிக்கு புதின் பாராட்டுகளை தெரிவித்து கொண்டதுடன், உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வது பற்றியும் பேசினார். இதனை தொடர்ந்து ரஷியாவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தும் முடிவில் டிரம்ப் உள்ளார். அதனுடன், ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு மேற்கொண்டார்.
இந்நிலையில், ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பலதரப்பு சந்திப்பு ஒன்றை இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடத்தினார். இதில் பங்கேற்பதற்காக இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அமெரிக்காவுக்கு சென்றார்.
அப்போது அவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டிரம்பின் உதவியாளரான அமெரிக்காவின் மோனிகா கிரவுலி வரவேற்றார். அதற்கு பதிலுக்கு மெலோனி, இந்திய முறையில் கரங்களை கூப்பி நமஸ்தே என வணக்கம் தெரிவித்து கொண்டார்.
இத்தாலியில் இதற்கு முன்பு நடந்த ஜி7 உச்சி மாநாட்டின்போது, வருகை தந்த தலைவர்களை இதேபோன்று நமஸ்தே என கூறி மெலோனி வரவேற்றார். இந்த கூட்டத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயான தோழமை மற்றும் அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் சமூக ஊடகத்தில் வைரலானதுடன், #Melodi என்ற ஹேஷ்டேக்கும் பிரபலமடைந்தது.
அவர்கள் இருவரும் செல்பி எடுத்து கொண்டனர். துபாயில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டின்போது இருவரும் செல்பி எடுத்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படம் ஒன்றை பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் நல்ல நண்பர்கள் என்றும் #Melodi என்றும் பதிவிட்டார்.
இந்தியாவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது நட்பு ரீதியில் இருவரும் உரையாடிய மற்றும் பேசி கொண்ட நிகழ்வுகளை எடிட்டிங் செய்து, பாலிவுட் இசை சேர்த்து, நகைச்சுவையான தலைப்புகளுடன் வீடியோக்களாகவும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பரவ விட்டனர்.
அப்போது, இரு நாட்டு தலைவர்களும் எரிசக்தி, தொழிற்சாலை போன்ற துறைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதற்கான விருப்பங்களை வெளியிட்டனர். அமெரிக்காவில் நடந்த பலதரப்பு உச்சி மாநாட்டின்போது அமைதிக்கான ஆதரவை மெலோனி வெளிப்படுத்தினார். உக்ரைன் பக்கம் நாங்கள் இருக்கிறோம் என்றும் அப்போது அவர் கூறினார்.