ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக நேற்று (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் முன்னணி வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் கழற்றி விடப்பட்டுவிட்டு, சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது பல கிரிக்கெட் ரசிகர்களையும் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. டி20 கிரிக்கெட்டில் 2023 ஆசியக் கோப்பையில் தங்கப்பதக்கம் வெல்ல உதவிய ஜெய்ஸ்வாலை அணியில் இடம் பெறவில்லை என்பது அதிர்ச்சியாகும்.
ரிசர்வ் பட்டியலில் கூட ஸ்ரேயாஸ் இல்லை
2024 ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப்பை 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபைனலுக்கு அழைத்து சென்ற ஸ்ரேயாஸ் ஐயரும் இதில் முன்னணி வேட்பாளராக இருந்தார். 604 ரன்கள் அடித்து, 175 ஸ்ட்ரைக் ரேட்டுடன் சிறப்பாக விளையாடிய இவருக்கு ரிசர்வ் பட்டியலில் கூட இடம் கிடைக்காமல் போனது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மறுபுறம், தொடர் டி20 போட்டிகளில் 150-200 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிக்க தடுமாறிய சுப்மன் கிலுக்கு, வருங்கால கேப்டனாக வளர்ப்பு நோக்கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்வை தொடர்பாக கேட்கப்பட்டதில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், “யாருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்க முடியும்” என கூறி தங்களின் முடிவில் உறுதியை காட்டினார்.
ஆசிய கோப்பையை வேண்டுமானால் வெல்லலாம்
இந்த நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த், 2025 ஐபிஎலில் சிவம் துபே, ரிங்கு சிங், ஹர்சித் ராணா போன்ற வீரர்கள் சிறந்த செயல்பாட்டை காட்டவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் போன்ற அனுபவம் வாய்ந்த மற்றும் நல்ல ஃபார்மில் உள்ள வீரர்களை தேர்வு செய்யாமல் கொண்டிருப்பதை அவர் கடுமையாக விமர்சித்தார்.
ஸ்ரீகாந்த் கூறியதாவது, “இந்த அணியுடன் நீங்கள் ஆசியக் கோப்பையை வெல்லலாம். ஆனால் 2026 டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாது. இந்த அணியை உலகக் கோப்பைக்கு எடுத்துச் செல்லக் கூடாது. கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பிருந்த சூழ்நிலைகளை மையப்படுத்தி இந்த அணி தேர்வு செய்யப்பட்டதுபோல் உள்ளது. தேர்வுக் குழு பின்தள்ளப்பட்டு உள்ளது” என்று அவர் கூறினார்.
இந்த 3 வீரர்கள் தேவையே இல்லை
மேலும், அக்சர் படேல் துணைக் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாகவும், ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்சித் ராணா ஆகியோர் எப்படி தேர்வு பெற்றார்கள் என்பது எனக்கு தெரியவில்லை எனவும் அவர் விளாசினார். ஸ்ரீகாந்தின் இந்த விமர்சனம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பி உள்ளது. 2025 ஆசியக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது, ஆனால் டி20 உலகக் கோப்பைக்கான போர் இன்னும் கடுமையாக இருக்கும் எனவும் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
About the Author
R Balaji