கோழிக்கோடு,
கேரள மாநிலத்தில் சமீப நாட்களாக நிபா வைரஸ், பன்றிக்காய்ச்சல் பரவியது. தற்போது அமீபா மூளைக்காய்ச்சல் சிலரை பாதித்து உள்ளது. மூளையை தின்னும் அமீபாவால், இந்த அரிய வகை நோய் பரவி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி பகுதியை சோ்ந்த 9 வயது சிறுமிக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அதற்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. பின்னர் மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், சிறுமிக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து இருப்பது உறுதியானது. தொடர்ந்து சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
அந்த சிறுமியின் 7 வயது சகோதரன் உடல் வலி, வாந்தி, கடும் தலைவலி உள்ளிட்ட அமீபா மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான்.
இந்தநிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 2 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஓமசேரி பகுதியை சேர்ந்த 3 மாத குழந்தை, அண்ணசேரி பகுதியை சேர்ந்த 40 வயது நபருக்கு நோய் பாதித்து உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 மாத குழந்தை வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறது.
கேரளாவில் கடந்த 2 வாரத்தில் 3 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.