புதுடெல்லி: குறைகேட்பு கூட்டத்துக்கு மனு அளிப்பது போல் வந்து, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்வர் ரேகா குப்தா தனது இல்லத்தில், பொது மக்கள் குறைகேட்பு கூட்டத்தை நேற்று நடத்தினார். அங்கு குஜராத்தின் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சக்ரியா என்பவர் முதல்வரிடம் புகார் மனு அளிக்க வந்தார்.
அவரை காவலர்கள் சோனை செய்து அனுப்பினர். மனு அளிக்க முதல்வர் ரேகா குப்தாவை நெருங்கிய அவர் சிறிது நேரம் பேசினார். பின்னர் முதல்வரை திட்டிய அவர் திடீரென அவரை கன்னத்தில் அறைந்தார். முதல்வரை தள்ளிவிட்டபின், அவரது தலை முடியை பிடித்தும் இழுத்தார். அதற்குள் முதல்வரின் பாதுகாவலர்கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து மடக்கினர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உறவினர் ஒருவரை டெல்லி போலீஸார் கைது செய்திருந்ததாகவும், அதற்காக உதவி கேட்டு அவர் டெல்லி முதல்வரை சந்திக்க வந்தார் என சிலர் கூறுகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், அவர் முதல்வர் இல்லத்துக்கு முதல் நாளே வந்து அங்குள்ள பகுதியை ஆய்வு செய்து வீடியோ எடுத்துள்ளார். எனவே இது திட்டமிட்ட தாக்குதல் என தெரியவந்துள்ளது. அந்த வீடியோ காட்சிகள் போலீஸ் விசாரணைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஹரிஸ் குராணா கூறுகையில், ‘‘இந்த தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த தாக்குதல் அரசியல் உள்நோக்கம் கொண்டதா என விசாரிக்க வேண்டும்’’ என்றார். டெல்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்ஷா கூறுகையில், ‘‘முதல்வரின் பணிகளை எதிர்க்கட்சியினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கின்றனர் என விசாரிக்க வேண்டும்’’ என்றார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான ஆதிஷி கூறுகையில், ‘‘ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் மீதான தாக்குதல் மிகுந்த கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் மீது டெல்லி போலீஸார் கடும் நடவடிக்கை எடுப்பர் என நம்புகிறேன்’’ என்றார்.
நாய்களை நேசிப்பவரா? – தாக்குதல் நடத்திய ராஜேஷ் சக்ரியாவின் தாய் பானு கூறுகையில், ‘‘எனது மகன் ராஜேஷ் நாய்களை நேசிப்பவர். டெல்லியில் தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த உத்தரவால், ராஜேஷ் கோபம் அடைந்தார். இதையடுத்துதான் அவர் டெல்லி சென்றார்’’ என்றார்.