மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.
ஆசிய கோப்பை போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இவர்களுடன் ரிசர்வ் வீரர்களாக வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரதான அணியில் யாராவது காயமடைந்து விலக நேரிட்டால் அவருக்கு பதிலாக ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கும்.
இந்நிலையில், ஆசிய கோப்பைக்கு இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படாத வீரர்களில் இருந்து 16 பேர் கொண்ட அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா கூறியதாவது,
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஆரம்பிக்கலாம். அவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்தவர் என்பதால் ஆசிய கோப்பை அணியிலும் அவரது பெயர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவருடன், நான் ருதுராஜ் கெய்க்வாட்டை வைத்துள்ளேன். அவர் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்தவர் மற்றும் குவஹாத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்தவர். ஐபிஎலில் அவர் காயமடைந்தார், ஆனால் அவர் ஒரு நிலையான ஆட்டக்காரர். அவர் முற்றிலும் காட்சியில் இருந்து மறைந்து விட்டார்.
மூன்றாவது இடத்தில் கே.எல்.ராகுல், அவர் தொடக்க ஆட்டக்காரராகவும், கீழ் வரிசையிலும் பேட்டிங் செய்ய முடியும். அவர் விக்கெட் கீப்பிங்கும் செய்கிறார். நான் ஷ்ரேயாஸ் ஐயரை என் அணியில் நான்காவது இடத்திலும், கேப்டனாகவும் வைத்துள்ளேன். ஐந்தாவது இடத்தில், ரிஷப் பந்தை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக வைத்துள்ளேன்.
ஆறாவது இடத்தில், நிதிஷ் குமார் ரெட்டி, ஏனெனில் அவர் ஹர்திக் பாண்டியா செய்யும் வேலையை செய்கிறார். ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களில், க்ருணால் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தரை வைத்துள்ளேன். ஒன்பதாவது இடத்தில் ரவி பிஷ்னோய்.
பத்து மற்றும் பதினொரு இடங்களில், பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜை வைத்துள்ளேன். மேலும் ரிசர்வ் வீரர்களாக சாய் சுதர்ஷன், துருவ் ஜுரெல், ரியான் பராக், சாஹல், கலீல் அகமது ஆகியோரை தேர்வு செய்வேன்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வேல், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், க்ருனால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
ரிசர்வ் வீரர்கள்: சாய் சுதர்ஷன், துருவ் ஜுரெல், ரியான் பராக், சாஹல், கலீல் அகமது.